Introduction to Santhosh
ஜனவரி 26, 2018 என்று நினைக்கிறேன். தற்செயலாக பார்க்க நேர்ந்த ஒரு விளம்பர மின்னஞ்சலின் மூலம் Listeners circle என்ற நிகழ்வுக்கு சென்றேன். அந்நியர்கள் ஓரிடத்தில் கூடி தங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்கு கூறும் நிகழ்வு. இது போன்ற நிகழ்வுகள் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஏராளமாக நிகழ்ந்து வருவதே பலருக்கு தெரிவதில்லை என்பது என் கணிப்பு. Listeners circle பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுத வேண்டும். தற்போது சந்தோஷுடன் உண்டான அறிமுகம் மட்டும். நான் சென்ற அன்று முதல் கதையே சந்தோஷினுடையது தான். 7 வருடங்கள் ஜப்பானில் இருந்ததாகவும், ஜப்பானின் கலாச்சாரம் மற்றும் மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் அறம் பற்றிய மதிப்பீடுகள் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். ஜப்பானில் ஏற்பட்ட மாபெரும் நில நடுக்கத்தில் சிக்கி அவதிக்குள்ளானதை, நகைச்சுவை உணர்வோடும் அதே சமயம் தீவிர தன்மை குறையாமலும் கூறினார். ஒரு சாதாரண நில நடுக்க கதையாக மட்டும் தோன்றவில்லை. கதையின் இறுதியில் சந்தோஷிற்கு கிடைத்த அறம் சார்ந்த வெளிச்சம் அவரை வேறொரு மனிதனாக ஆக்கியது என்பது அவருடைய கதை சொல்லலிலேயே தெளிவாக தெரிந்தது. அந்த கதை என்னை வெகுவாக பாதித்தது என்று உணர்ந்தேன். அதை ஒரு சிறுகதையாக மாற்றும் எண்ணம் என்னுள் தோன்றியது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் Listeners circle நிகழ்விற்கு சென்று கொண்டிருந்தேன். சந்தோஷ் அவர்களை நேரடியாக சந்தித்து, அவருடைய நில நடுக்க அனுபவத்தை பற்றி மேலும் பல நுண்ணிய தகவல்கள் வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அவரை அந்த நிகழ்விற்கு பிறகு சந்திக்கும் வாய்ப்பு தள்ளி போய்க் கொண்டே இருந்தது. என்னுளிருந்த கதை எழுதும் உத்வேகம் குறைவதற்கு முன் அக்கதையை எழுதி விட வேண்டுமென்று முடிவெடுத்து, அதை எழுதி அனந்த விகடன் இதழி ற்கு அனுப்பினேன். ஏப்ரல் மாத கடைசியில் அது பிரசுரமானது.
அதன் பிறகு சந்தோஷின் தொடர்பு எண்ணை வாங்கி அவருக்குத் தெரியப்படுதினேன். அவரும் கதை நன்றாக வந்திருப்பதாக கூறினார். அதன் பிறகு சந்தோஷ் அவர்களை தொடர்ந்து பல நிகழ்வுகளில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நல்ல நட்பாக அது மலர்ந்தது. சிறுகதை எழுதும் தருணத்தில் என் மனதில் தோன்றிய ஒன்று என்னவெனில், சந்தோஷிற்கு கிடைத்த அந்த அனுபவம் மிகவும் அரிதான ஒன்று, ஒருவரின் வாழ்வில் இது போன்ற அனுபவங்கள் அடிக்கடி நிகழாது என்று நினைத்தேன். ஆனால், சந்தோஷ் தன் வாழ்நாளில் 5 இயற்கை சீற்றங்களை சந்தித்துள்ளார் என்பது பின்னாளில் தெரிந்து கொண்டேன். அவருடன் பழகும் வாய்ப்பு அதிகமாகி, அவருடைய பல அனுபவங்களை தெரிந்து கொண்டேன். ஜப்பானில் 7 வருடம் வசித்த சந்தோஷிற்கு வாழ்வு பெரும் கொடையாக பல அரிதான அனுபவங்களை தந்திருக்கிறது. அவருடைய அகக் கண் பல வாழ்க்கை தருணங்களை வியப்புடன் கண்டு அதை முழுதாக உள் வாங்கியிருக்கிறது. அலுவலகம் மூலம் பல்வேறு நாடுகள் சுற்றும் வாய்ப்பு அமைந்த ஒருவருக்கு அனுபவங்களை உள்வாங்கும் அகக் கண் திறக்கவில்லை எனில், அவருக்கு கிடைக்கப்பெற்ற கொடையை இழக்கிறார் என்றே அர்த்தம்.
Tahatto – The platform which pushed Santosh to do this play
ந்தோஷ் தமிழ் என்பதால் அவருடன் உண்டான உரையாடல்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அவருடைய அனுபவ பகிர்தல் அனைத்தும் சிறுகதையாக மாறும் தன்மை கொண்டவை அல்லது சிறுகதையாக மாற்றி சந்தோஷ் நமக்கு கூறுகிறார். அவருடைய கதைகள் அல்லது அனுபவ பகிர்தல் LIsteners circle நிகழ்வில் தொடர்ந்து வெவ்வேறு மக்களால் வியந்து பார்க்கப் பட்டது.
பல மாதங்களுக்கு பின் நாங்கள் இருவரும் Tahatto நாடக குழு ஏற்பாடு செய்திருந்த பணிமனைக்கு சென்றிருந்தோம். அங்கிருந்து எழுந்த செயலூக்கத்தில், சந்தோஷ் திடீரென்று ஒரு நாள் என்னிடம் “பிரசன்னா, நான் அந்த earthquake experience அ play ஆ மாத்தலாமானு பாக்குறேன்” என்றார். அதுவும் தன்னந்தனியாக அதை அரங்கேற்ற போவதாக கூறினார். முதலில் அவருடைய ஆர்வ கோளாரிற்கு அளவே இல்லை என்று தான் நினைத்தேன். சிறிது நாட்கள் கழித்து இந்த எண்ணம் அவரிடம் இருந்து மறையும் என்று யூகித்தேன். ஆனால், நேர்மாறாக அவரிடமிருந்த உற்சாகம் பெருகிக் கொண்டே தான் இருந்தது. ஒவ்வொரு சனி அல்லது ஞாயிறு அன்று நாங்கள் அட்டகலாட்டாவில் சந்திப்போம். Mono act பற்றி கூறிக் கொண்டே இருந்தார். எப்படியெல்லாம் அதை அரங்கேற்றுவது என்று தன்னுள் கற்பனையை வளர்த்துக் கொண்டே இருந்தார். ஆனால் எனக்கோ கொஞ்சம் கூட நம்பிக்கையே வர வில்லை. அந்த நிலநடுக்க அனுபவம் பலரை மையமாக கொண்டு நிகழ்வது. மேலும் play ஆக மாற்ற பல உள்ளீடுகள் கதையில் தேவை. இவ்வாறு பல காரணங்களால் என்னால் இது அரங்கேறும் என்று நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஆனாலும், சந்தோஷின் உத்வேகத்தை குறைக்கக் கூடாது என்பதற்காக அவரை தொடர்ந்து ஊக்கப் படுத்தி கொண்டிருந்தேன். “முதல் ல ஸ்கிரிப்ட் எழுதுங்க ஜி.” என்று கூறினேன். ஆனால் அவர் “அதெல்லாம் தேவ இல்ல, எல்லாம் என் mind ல இருக்கு” என்றார். எனக்கு பேரதிர்ச்சி மட்டும் தான் மிஞ்சியது. சரி, கிறுக்கு தனத்தின் உச்சத்தில் இவர் இருக்கிறார் என்று நினைத்தேன்.
திடீரென்று ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்து, அட்டகலாட்டாவில் 23 நவம்பர் அன்று பதிவு செய்து விட்டதாகவும், இந்த நாடகத்தை நிச்சயம் அரங்கேற்றி தீர்வதாகவும் கூறினார். நான் மிகவும் சந்தேகமாக “ஜி. நீங்க இன்னும் script எழுதல, ஞாபகம் இருக்கா” என்றேன். சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. அதன் பிறகு, போஸ்டர் தயார் செய்தார். பிறகு book my show தளத்தில் பதிவு செய்தார். நான் வெறுமனே இந்த அனைத்து பைத்தியக்கார தனங்களையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன். “ஜி. நீங்க இன்னும் ஸ்கிரிப்ட் எழுதல..” என்று நினைவூட்டினேன். வழக்கம் போல் சிரிப்பு ஒன்றே பதில்.
The show day
நிகழ்வு நாள் நெருங்கி கொண்டே இருந்தது. நான் அலுவலக வேலைக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருடைய பொறுப்பின்மை நினைத்து எனக்கு சற்று கோபம் கூட வந்தது. Nov 23 நெருங்க, என்னுள் நான் பயத்தை உணந்தேன். ஸ்கிரிப்ட் இல்லாமல் இந்த மனிதன் எப்படி சமாளிப்பார் என்று யோசித்துக் கவலைக கொண்டேன். அவருடைய விளம்பரங்கள் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு விதமாக விளம்பரங்கள் உலவின. பலர் ticket வாங்க ஆரம்பித்திருந்தனர். அவர் அப்போதும் பெரிதாக ஸ்கிரிப்ட் எல்லாம் எழுத வில்லை என்று தெரிய வந்தது. கதையில் வரும் சம்பவங்களை, இரண்டு மூன்று வரிகளில் எழுதி வைத்துக் கொண்டார். ஆனால், சந்தோஷ் எப்படியோ சமாளித்து விடுவார் என்ற நம்பிக்கை திடீரென்று தோன்றியது. தன்னுடைய அனுபவங்களை ஏற்ற இறக்கங்களுடன் கூற முடிவதால், நிகழ்வு நாளன்று ஓரளவுக்கு தேறி விடுவார் என்றே நினைத்தேன்.
நிகழ்வு நாள் வந்தது. நான் ticket சரி பார்த்து பார்வையாளர்களை உள்ளே அனுப்பும் பணியில் இருந்தேன். நிகழ்வு தொடங்கியது. Listeners circle Karthik முன்னுரை போன்ற அறிமுகத்தை சந்தோஷிற்கு வழங்கினார். நிகழ்வு ஆரம்பமானது. இனிமேல் பார்வையாளர்கள் யாரும் வர மாட்டார்கள் என்று உறுதிபடுத்திக் கொண்டு நான் நிகழ்விடத்திற்கு சென்றேன். அமெரிக்கா சென்று விட்டதால், அவர் எனக்கு முன்னரே நடித்துக் காண்பிப்பதாக இருந்த திட்டம் நிறைவேறாமல் போனது. நான் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். பலர் பங்குபெறும் அந்த அனுபவத்தை எப்படி ஒற்றை ஆளாக நின்று நடிப்பார் என்பதை காண. நான் உள்நுழைகையில், பார்வையாளர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே பல முறை இவருடைய நில நடுக்க கதையை கேட்டவனாக இருந்தாலும், மேடையில் அவருடைய மிகை மடிப்பு கலந்த நகைச்சுவை ததும்பும் சொற்களுக்கு இடையில் அவருடைய கதை சொல்லல் முறை வசீகரமாக இருந்தது. பல இடங்களில் சிரித்து, அழுது, உடைகளை எவ்வித சிக்கலும் இல்லாமல் மாற்றி சந்தோஷ் ஓர் உச்சத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தார். அநேக இடங்களில் மக்கள் சிரிக்க தவறவில்லை. நிசப்தம் தேவையான இடங்களை நிரப்பின.
நில நடுக்க கதை மட்டும் அல்லாமல், தன்னுடைய வெவ்வேறு ஜப்பானிய அனுபவங்களையும் கலந்து கட்டி, கோர்வையாக கதையை உருவாக்கியிருக்கிறார் என்பது சிறிது நேரம் கழித்தே எனக்கு தெரிய வந்தது. ஒட்டுமொத்தக் கதையின் மைய சரடாக அவர் எடுத்துக்கொண்டது, மானுடம். சந்தோஷ், மத்திய வர்க்கத்து தமிழ் பிராமண குடும்பத்திலிருந்து வருபவர். அந்த சமூகத்திற்கே உண்டான சில குணாதிசியங்களை கதையின் தொடக்கத்தில் கூறி, ஜப்பான் வாய்ப்பு கிடைத்ததை விரிவாக்கி, விமான பயணம் முதல் நில நடுக்க அனுபவம் முடியும் வரையில் தான் கண்ட சாதாரண மனிதர்களின் மாபெரும் மானுட உணர்ச்சியை விவரித்தார். சரியாக சொல்ல வேண்டுமெனில், கதையில் மூன்று சாதாரண மனிதர்களின் அசாதாரணமான பண்பை பற்றிக் கூறினார். இடையிடையே ஜப்பான் மக்களின் உளவியல், பண்பாடு, பழக்க வழக்கம் என்று தன்னுடைய பார்வையை மிக சிறப்பாக கதையின் இடையில் செருகி பார்வையாளர்கள் முன் வைத்தார். பார்வையாளர்கள் கதையினுள் முழுதாக கரைந்து உருகினர் என்பது தெளிவாக விளங்கியது. நான் எதிர் பார்த்ததற்கும் மேலாக நிகழ்வு வெகு சிறப்பாக சென்று கொண்டிருந்தது. எனக்கு உள்ளே மிகுந்த மகிழ்ச்சி பொங்கி வர தொடங்கியது. அது நம்பிக்கை கொடுக்கும் மகிழ்ச்சி. ஒரு தனி நபர் தன் திறன் மேல் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கையை காண நேர்ந்த தால் வந்த உவகை என்று இப்போது நினைக்கும் போது தோன்றுகிறது.
தோராயமாக 45 நிமிடம் நடந்த மோனோ ஆக்ட், அனைவரின் மனமார்ந்த கைதட்டலுடன் முடிவடைந்தது. சந்தோஷ் நிகழ்த்தியது, Play? Standup comedy? story telling? என்று ஒரு வகையராக்குள் அடைக்க முடியாது. அனைத்தும் கலந்த கலவையாக இருந்தது. பார்வையாளர்களை பார்த்து பேசுகிறார், பல சமயம் உடைகளை மாற்றி, பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் செய்கிறார். சில இடங்களில் நின்று நேரடியான நகைச்சுவைத் தருணங்களையும் பகிர்கிறார். பார்வையாளர்கள் அனைவரும் மிகுந்த மன நிறைவுடன் இருந்தனர் என்பது சொல்லத் தேவைப்படாத ஒன்று.
After the show
நிகழ்வு முடிந்ததும், பார்வையாளர்கள் உடனான கேள்வி பதிலில் பங்கு பெற்றார். ரஜினி உண்மையிலேயே ஜப்பானில் பிரபலம் தானா, ஜப்பானில் பாம்பு கறி சாப்பிடப்படுவதுண்டா என்று நிறைய ஜப்பானின் கலாச்சார, பண்பாடு குறித்த கேள்விகள் வந்து கொண்டே இருந்தன. அனைத்திற்கும் ஜப்பானிய வாழ்க்கை முறையில் முழுதாக திளைத்த அனுபவத்திலிருந்து சந்தோஷ் ஒவ்வொன்றிற்கும் நகைச்சுவை கலந்த பதிலை கூறினார். இறுதியாக பார்வையாளர்கள் அனைவரையும் அரங்கிற்கு அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். எனக்கு தெரிந்து வேறு எந்த ஒரு நாடக நிகழ்விலும் பார்வையாளர்கள் இந்தளவிற்கு திரையை தாண்டி மறு பக்கத்திற்கு சென்று ஒரு கலைஞனுடன் உரையாடி இருக்கிறார்களா என்று அறியேன். ஆனால், இங்கு பார்வையாளர்கள் அனைவரும் சந்தோஷிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு சென்றனர். சந்தோஷ் அனைவரையும் தன்னுடைய உரையாடலில் இணைத்துக் கொண்டார். அவருடைய இந்த பண்பு தான் அவருக்கு பல அனுபவங்களை தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். பெருமூச்சு வெளிவந்தது. நிகழ்வு சிறப்பாக முடிந்த ஒரு சந்தோஷம் எங்கள் மூவரின் (கார்த்திக், சந்தோஷ் மற்றும் நான்) முகத்திலும் நன்றாகவே தெரிந்தது. சந்தோஷின் வெற்றி என் போன்றவர்களுக்கு மிகவும் முக்கியம். அவருடைய செயலூக்கம் என்பது பலருக்கு வியப்பளிக்க கூடியதே. இருத்தலியல் சார்ந்த உள அழுத்தம் அவருள் சற்று இருப்பதாக என் எண்ணம். தன்னுள் ஒரு தவிப்பை உணர்ந்த ஒருவன், அதன் பிறகு வெறும் வெட்டி பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல் செயலில் தாவி விடுவான் என்பது சந்தோஷின் வழி நான் கண்டடைந்த ஒன்று. கலை அல்லது சமூக பணி சார்ந்த தளங்களில் ஒருவன் தொடர்ந்த செயலூக்கத்தில் இருப்பது என்பது பெங்களூர் போன்ற பெருநகரங்களில் நிறைய காண கிடைக்கலாம். காரணம், மென்பொருள் வேலை கொடுக்கும் ஒரு வித அழுத்தமாக இருக்கலாம் என்பது என் அவதானிப்பு. ஒரு இடத்தில் அழுத்தத்தை உணரும் ஒருவன் வேறொரு இடத்தில் அதை வெளியேற்றுகிறான். மென்பொருள் வேலை கொடுக்கும் அலுப்பான வாழ்க்கையிலிருந்து, இன்றைய பெங்களூர் வாசிகள் பலர் தங்களை ஏதோ ஒரு கலை அல்லது சமூகம் சார்ந்த செயலில் மூழ்கடித்துக்கொள்கின்றனர் என்றே நினைக்கின்றேன். இந்த வகையில் சந்தோஷின் “ஜப்பானில் சந்தோஷ் கலியாணராமன்” “Storytelling” என்ற கலைக்கு ஒரு நல்ல வருகையாகவே படுகிறது.
அட்டகலாட்டாவில் நடந்த நிகழ்வை பற்றி கேள்வி பட்டு Dialogues cafe ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களாகவே சந்தோஷை அழைத்து, ஜப்பானில் சந்தோஷ் கலியாணராமனை அவர்களுடைய இடத்தில் நிகழ்த்த சொன்னார்கள். Dec 21 அன்று நடந்த நிகழ்வில், மூக்கு ஒழுக, கொதிக்கும் ஜுரத்துடன் எந்தவித சிரமமும் அன்றி தன்னுடைய திறனை வெளிக்காட்டினர். முதல் நிகழ்வில் கிடைக்க ப் பெற்ற சில விமர்சனங்களை உள் வாங்கி கொண்டு அதை இந்த நிகழ்வில் சரி செய்து கொண்டார். Dailogues cafe வில் நடந்த நிகழ்வன்று 4 நபர்கள் முன்னரே அட்டா கலாட்டாவில் பார்வையாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து, இன்னும் பல இடங்களில் இந்த நிகழ்வை சந்தோஷ் நடத்துவதாக உள்ளார்.
நகைச்சுவை, சபலம், ஜப்பானிய கலாச்சாரம் பற்றிய தகவல், நட்பு வட்டம், இவை அனைத்திற்கும் மேலாக மானுடம் என்ற உயர்ந்த கருதுகோளை நிறுவும் இவருடைய “ஜப்பானில் சந்தோஷ் கலியாணராமன் ” அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.
இறுதியாக ஒன்று, இந்த நாடகம் போன்ற கதைசொல்லலை மிகப் பெரிய கலை படைப்பாக காண முடியாது. கலை படைபிற்கான தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. கலை கொடுக்கும் விசாலமான வெளிச்சமும், அமைதியும், யோசிக்க வைக்கும் தன்மையும் இந்த நாடகத்தில் காண முடியாது. ஆனால், மேல்மட்ட அளவில், ஒரு சிறந்த கதையாகவே இந்த “ஜப்பானில் சந்தோஷ் கலியாணராமன்” தோன்றுகிறது. இதற்கு காரணம் நேர்மையாக தன்னுடைய அனுபவங்களை முன் வைக்கும் சந்தோஷின் சிறந்த கதை சொல்லல் மட்டுமே.
Read more Tamil articles on Bengaluru Review :
அட்டகலாட்டாவில் பெருமாள் முருகன்
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா 2019
புதினத்தினால் இயல்பாக எழுந்து வந்த தன்னுரையாடல்