அட்டகலாட்டாவில் பெருமாள் முருகன்

தமிழிலக்கிய சூழலில் பல காலமாக ஒலித்த குரல்.

5.30 மணி நிகழ்விற்கு 4.30 மணிக்கே அட்டா கலாட்டாவிற்கு வந்து சேர்ந்தாயிற்று. விழா நாயகர்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து 5 நிமிடங்கள் கழித்து வருவதென்பது இந்திய சூழலில் எதிர்பார்க்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், தமிழகத்தில் நடக்கும் இலக்கிய விழாக்கள் அவ்வாறானதாக இல்லை என்பது என் அவதானிப்பு. விழாவின் மையம் ஒரு எழுத்தாளராக இருப்பின் அவர் குறைந்தது அரை மணி நேரம் முன்னரே வந்தமர்ந்து பலரிடம் உரையாடிக் கொண்டிருப்பது எந்த நிகழிச்சியிலும் காணக்கூடியது. பெருமாள் முருகனும் அவ்வாறே. 4.30 மணிக்கு உள்நுழைகையில் இருக்கைகள் ஒருங்கே அமைக்கப்பட்டிருந்தன. பெருமாள் முருகன் முன்னிருக்கை வரிசையில் அமர்ந்திருந்தார். அருகேபெங்களூர் வாழ் மங்கைஎன்ற அடையாளத்துடன் ஒரு பெண் பெருமாள் முருகனிடம் நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தார். அதை அலைபேசியில் பதிவும் செய்துகொண்டிருந்தார். நேர்காணலின் போது இயல்பாக ஏற்படும் முக பாவனைகளை எழுத்தாளரும், நேர்காணல் எடுத்தவரும் சூடிக்கொண்டிருந்தனர்.

அவரை சந்திப்பது இது இரண்டாம் முறை. பெருமாள் முருகனை நான் முதன் முதலாக சந்தித்தது, அவருடைய விருத்தங்களை டி.எம்.கிருஷ்ணா நாமக்கல்லில் கச்சேரியாக அரங்கேற்றிய போது தான். மாதொரு பாகனின் அக்கப்போர்களிலிருந்து விடுபட்டு சற்றே சூழலின் திடகாத்திர பிடியிலிருந்து விளக்கப்பட்டு அந்நேரத்தில் அவர் எழுதிய விருத்தங்கள் அவை என ஊகிக்கிறேன். பெருமாள் முருகனின் சில சிறுகதைகள், குறுநாவல்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். அதுவும் நான்கைந்து வருடங்களுக்கு முன். பெருமாள் முருகன் என் மனதில் தீவிர இலக்கிய அலையின் ஓர் எழுத்தாளராக வடிவம் கொண்டார். ‘பீக்கதைகள்என்ற அவருடைய சிறுகதை தொகுப்பு என்னை அவரிடம் வெகுவாக கவர்ந்தது. நீர் விளையாட்டு போன்ற சில சிறுகதைகளும் அவ்வப்போது என் மனதில் வந்து போவதுண்டு.

பொதுவாக தமிழகத்தில் நடக்கும் இலக்கிய கூடுகையில் பிரபல எழுத்தாளர்களை சுற்றி சில கூட்டங்கள் மொய்த்து க் கொண்டே இருக்கும். அது ஒரு வேலி போன்று. அதை தாண்டி அந்த எழுத்தாளருடன் உரையாட வேண்டும் என்று முற்படுகையில் நம்முடைய கூச்சம் அதை வெகுவாக தடுக்கும். அந்த கற்சுவரையும் கடந்து சூழ நிற்கும் பலரை கருத்தில் கொள்ளாமல் நம்முடைய மொண்ணை கேள்விகளை கேட்கும் போது கிட்டத்தட்ட நம்முடைய சுய பலம் அனைத்தும் கரைந்து ஒழுகி வடிந்திருக்கும். எழுத்தாளர்களும் வாசகர்களை மதித்து அவர்களுடைய கேள்விக்கு தெளிவாக பதிலளிப்பர். அட்டா கலாட்டா போன்ற பெருநகரில் அமைந்துள்ள ஒரு புத்தக கடையில் நடைபெறும் நிகழ்விற்கு திருச்செங்கோடு பகுதியிலிருந்து வந்த தமிழ் எழுத்தாளரை சூழ்ந்து அரட்டை அடிக்கும் கூட்டம் இல்லை என்பது சற்று ஆசுவாசமாக இருந்தது.

நேர்காணல் முடிந்தவுடன் பெருமாள் முருகன் தனித்து விடப்பட்டார். சுவற்றின் உச்ச வரம்பிலிருந்து செலுத்தப்பட்ட விளக்கொளியில் அவருடைய கருப்பு வெள்ளை முடிகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. பெருமாள் முருகன் என்றதுமே அவருடைய கருப்பு வெள்ளை தாடி மற்றும் சிகையும், அனுமதியின்றி வெளிவந்த பற்களுடன் காட்சிப்படும் அடங்கிய சிரிப்பும் தான் என் மனதில் அரங்கேறும். நேர்காணல் முடிந்தவுடன் அவர் அமர்ந்திருந்த முன்னிருக்கையிலிருந்து பின்னே சற்று திரும்பி பார்த்தார். நிகழிச்சிக்கான ஏற்பாடுகள் சற்று முன்னரே தொடங்கியிருந்ததால், நிகழ்வை பற்றிய எந்த அறிதலுமின்றி அட்டா கலாட்டாவிற்கு சாதாரணமாக படிக்க வரும் மக்கள் அனைவரும் நெருக்கி இடித்து உட்கார்ந்திருந்தனர்.  நானும் என்னுடைய நண்பரும் விழாவிற்கான பின்வரிசை நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். நாங்கள் மட்டுமே நாற்காலி வரிசையில் இருந்தோம். கூட்டம் எதுவும் வந்திருக்கவில்லை. எங்களை திரும்பி பார்த்த அவர் சிரிக்க முயன்று அவ்வெண்ணத்தை கைவிட்டுயாரு இந்த ரெண்டு பேரு.. பெங்களூர்ல நம்ம கூட்டத்துக்கு இப்படி 45 நிமிஷம் முன்னாடி வந்துருக்காங்க.. கண்டிப்பா வேற எங்கயும் உட்கார இடம் கிடைக்காம தான் இங்க நாற்காலி வரிசைல உட்கார்ந்திருக்காங்க..’ என்ற எண்ணம் அவருள் ஓடியிருக்க வேண்டும் என்பதை அவருடைய கண நேர பார்வை கூறியது.  

பின்னர், அட்டா கலாட்டாவின் உரிமையாளர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருந்த சாய் கோதை அவர்களும் அவருடன் உரையாடலை தொடர்ந்தனர். ‘நிழல்முற்றத்து நினைவுகள்என்ற தொகுப்பை சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் வாங்கியிருந்தேன். அதில் அவருடைய கையொப்பம் வாங்கி ஓரிரு கேள்விகள் கேட்க வேண்டும் என்றெண்ணியிருந்தேன். தொடர் உரையாடலில் ஈடுபட்ட அவர் சற்று தனிமைப்படுத்தபட்டவுடன் சட்டென்று அவரிடத்து முன்னேறி அறிமுகம் செய்துகொண்டு என்னுடைய கேள்வியை கேட்டேன். மிகவும் நிதானமாக பதிலளித்தார். அவர் பதிலளித்ததற்கு பின்பே நான் என்னுடைய கேள்வியை தவறாக புரிந்து வைத்திருக்கிறேன் என்று விளங்கிற்று. எங்கிருந்து என்றறியேன். தீடிரென யௌவனம் நிரம்பிய பெண்கள் பலர் அரங்குக்குள் நுழைந்தனர். நாகரீக உடைகளுக்குள் பெருமாள் முருகனை வாசிக்கும் மனங்கள். அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடைந்த வரவேற்புகள் ஒரு நொடியில் என் மனதில் வந்து போயின. தொள தொள கீழாடைகளும், அக்குள் தெரியும் ஸ்லீவ்லஸ்களும் அணிந்த பெண்கள் ‘Sir I am your huge fan’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கையொப்பம் வாங்கும் போது இது வரை நான் தமிழகத்தில் கலந்து கொண்ட இலக்கிய கூட்டங்களை நினைத்துக் கொண்டேன். ‘எப்போ வருவாரோ..’ என்று பார்வையாளர்களின் வருகைக்காக  ஏங்கி தவித்துக் காத்திருக்கும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் விழா நாயகர்களை சில மணி நேரங்கள் காக்க வைத்து இறுதியாக 10 பேர் தேறி வந்த கூட்டத்தை வைத்து நிகழ்வுகளை நடத்துவர். அதுவும் பெண்கள் கூட்டம் என்பது தமிழிலக்கியதிற்கு ஏழாம் பொருத்தம் போன்றது.  தமிழகத்தில் தீவிர இலக்கியத்தின்பால் சாய்விருக்கும் பெண்கள் கூட்டம் ஓரளவுக்கு கூடுகிறது என்றால் அது ஜெயமோகனின் கூடுகையில் மட்டும் தான் என்பது என் குறுகிய அனுபவத்திலிருந்து நான் அறிந்தது. மற்ற நிகழ்ச்சி கூட்டங்களில் 40 வயது தாண்டி வீட்டில் கணவனின் அனுமதியை பெற்று மிகவும் அலுத்து போன வாழ்க்கையில் உழலும்நான் வெறும் சமையற்கட்டு மனைவி அல்லஎன்று நிரூபிக்கும் மங்கையர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இங்கு அட்டா கலாட்டாவில் கலந்து கொண்ட பெண்கள் கூட்டத்தை பார்த்த பொழுது, புதுமைப்பித்தன் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால்அடேய் முருகா, எல்லா தமிழ் எழுத்தாளர்களும் உன்னை போல்  பேரு பெற்றவர்களாக இருக்க வேண்டுமென என் குல தெய்வம் கந்தசாமியை வேண்டிக் கொள்கிறேன்..’ என்று ஆசி வழங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

‘One Part Woman’, ‘Goat thief’, ‘Songs of coward’, ‘Pyre’, ‘Poonaachi’ போன்ற அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்  பல வாசகர்களிடம் சில திறப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்று ஊகிக்க முடிகிறது. பெருநகர் வாழ்வியல் கொண்ட மக்களிடம் பெருமாள் முருகன் போன்ற தீவிர இலக்கிய தமிழ் எழுத்தாளர்கள் சென்று சேரும் இடம் கவனிக்கத் தக்கது. குறைந்த அளவே நான் பெருமாள் முருகனை படித்திருந்தாலும் என்னுடைய அவதானங்கள் கீழ்வருமாறு,

1) பெருமாள் முருகன் முன்வைக்கும் வாழ்க்கை என்பது பெருநகர் வாழ்வியலில் சிக்கி தவிக்கும் மனங்களுக்கு நேரெதிர் உலகம். அவற்றை விதந்தோந்தும் வாசகர்களின் பெற்றோர் அவ்வாறான சிறுநகரங்களிலிருந்து வந்திருக்க க் கூடும். மொழி பெயர்ப்புகளில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகள் கடந்து வாசகர்களின் மனதில் பெருமாள் முருகன் பதிவது இந்த கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பின்னணியாக இருக்கலாம். தமிழகத்தில் உள்ள சாதியடுக்கு முறையை தூரத்திலிருந்து பார்க்கும் பெரு நகர் மக்களுக்கு ஆங்கிலத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு மத்தியஸ்தராகவும் பெருமாள் முருகனை பார்க்கலாம்.

2) கதைகளினூடே அவர் கடத்தும் இலக்கிய தன்மை மிக பெரிய காரணமாக இருக்கலாம். பல் வேறு நாடுகளிலிருந்து ஆங்கிலம் வழியாக இறக்குமதியாகும் பல நல்ல புதினங்களை நாம் எப்போதும் தவறவிட்டதில்லை. அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வரும் ஒரு புதினத்தை அணுகுவதில், அதன் இலக்கிய தரத்தை உணர்ந்து நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தடையும் இருக்காது.

தமிழிலக்கிய சூழலில் பல காலமாக ஒலித்த குரல் தான் இது. மொழி பெயர்ப்புகள் அதிமாகும் போது மட்டுமே தமிழ் எழுத்தாளர்கள் மேலும் இந்தியா முழுதும் வாசகர்களை பெற்று சற்று கவனம் பெறுவர். தமிழில் அசோகமித்திரன், அம்பை, சு.ரா, ஜெயமோகன், சாரு நிவேதிதா மற்றும் சிலரின் ஆக்கங்களே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்ற காலம் சென்ற புலம்பலையும் மொழிபெயர்ப்பில் உள்ள இடர்கள் (முக்கியமாக பகுதி சார்ந்த பேச்சு வழக்கு மற்றும் பழமொழிகளை மொழிபெயர்த்தல்) அனைத்தையும் தவிர்த்துவிடுவோம். ஒரு உதாரணத்திற்காக, அனைத்து ஆக்கங்களும் மொழி பெயர்க்க படுகிறதென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அனைத்துமே கவனத்தை ஈர்ப்பதில்லை. அதுவும் பெருநகர் வாசகர்களை வாசிப்பின் பக்கம் இழுப்பதென்றால் அவ்வளவு எளிதில்லை. நன்றாக மொழிபெயர்க்கப்பட்டப் பின்னும் பெருவாரியாக வாசகர்களை போய் சேராத பல நல்ல ஆக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பது என் அனுமானம். இவ்விடத்தில் வாசகர்களுக்கு வழிகாட்டிகள் தேவை படுகின்றனர். தமிழில் சுஜாதா, சு.ரா, .நா.சு., ஜெயமோகன், எஸ்.ரா போன்றோர் பல வாசகர்களுக்கு பல தரமான தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கின்றனர். இவர்களை போன்ற வழிகாட்டிகள் வழியே பா.சிங்காரம் பல பத்தாண்டுகள் கடந்து கவனம் கொள்ளப் பெற்றார். இவ்வாறாக தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு வரும் அனைத்து புத்தகத்தையும் ஆராய்ந்து வாசகர்களுக்கு வெளிச்சம் போட்டு வழி காட்ட யாரேனும் இருக்கின்றனரா என்றறியேன். சு.ராவின் புளியமரத்தின் கதையை ‘Tale of a Tamarind tree’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆதவனின் என் பெயர் ராமசேஷனை ‘I, Ramaseshan’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்னும் பல உள்ளன. பெருநகர் இலக்கிய வாசகர்களுக்கெல்லாம் இந்த ஆக்கங்களின் மீது கவனத்தை கொண்டு சேர்க்க என்ன வழி?

சில வருடங்களுக்கு முன் பெருமாள் முருகன் அனுபவித்த நரக வேதனைகள் பற்றி இலக்கிய சூழலில் இருக்கும் சில நண்பர்களிடமிருந்து தோராயமாக கேட்டறிந்தேன். அதே நேரத்தில் அவரை ஆதரித்து பலர் அவரருகே இருந்தனர் என்றும் ஊகிக்கிறேன். திரும்பி பார்க்கையில் மாதொரு பாகனின் சர்ச்சைக்கு பிறகு இந்தியா முழுதும் அவரடைந்த கவனம் எதிர் பார்த்த ஒன்று தான். ஆனால், அவர் எல்லாவற்றையும் பொறுமையுடன் எதிர்கொண்டு மீண்டு எழுந்து வந்து எழுதுவதற்கும், கவன ஈர்ப்பிற்கும் அந்த சர்ச்சை ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. எந்தவொரு கலைஞனுக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட அவன் கலையை சார்ந்திருப்பது மட்டுமே வழி (Art is a therapy) என்பது பெருமாள் முருகனின் வழியாகவும் புலப்படுகிறது.  ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கவன ஈர்ப்பும், வாசகர்கள் எண்ணிக்கையும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு எழுத்தாளனும் இப்படியாக கொலை மிரட்டல்களையும், வாழ்வியல் நெருக்கடியும் அனுபவித்த பின்னர் தான் திரண்ட வாசக கவனம் பெற வேண்டும் என்றால் பிரச்சனை இலக்கியத்தை அணுகும் சமூகத்திடம் தான் உள்ளது.

விழாவிற்கு வருவோம். வழக்கம் போல் இந்திய சம்பிரதாயப்படி 15 நிமிடம் தாமதமாக விழா தொடங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளர் பெருமாள் முருகனிடம் சற்றே உடைந்த தமிழில் கேள்வி கேட்டு, பெருமாள் முருகனின் பதிலை பார்வையாளர்களுக்கு 80 சதவீத மாற்றிழப்புடன் ஆங்கிலத்தில் கடத்தினார். பல பதில்களை நேர்மையாக தன்னால் மொழிபெயர்க்கமுடியவில்லை என்று ஒப்புக்கொண்டு பார்வையாளர் களை மொழிபெயர்க்கும் படி கூறினார். சம்பாஷணைகள் பெருவாரியாக அவரின் அமைதி காலங்களை (Silence period) பற்றியும் நிகழ்ச்சியின் மையமானதோன்றாத் துணை புத்தகத்தை பற்றியும் தொடர்ந்தது. பெயருக்கு பின் ஒட்டி கொண்ட இளங்கலை அல்லது முதுகலை பட்டம் போல் பெருமாள் முருகனின் பின்னால் மாதொரு பாகனும் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை சார்ந்த கேள்விகளன்றி அவர் பங்கு பெரும் தமிழகத்தை தாண்டிய இலக்கிய கூட்டத்தில் சாத்தியமா என்றறியேன்.

பெருமாள் முருகன்தோன்றாத் துணைபுத்தகத்தை பற்றி மிக விரிவாக பேசினார். இந்த புத்தகத்தை எழுத காரணமான சம்பவத்தை பற்றியும் விவரித்தார். ஒரு எழுத்தாளர் ஒரு படைப்பை எழுத வேண்டும் என்று தோன்றிய தருணம் பற்றி விளக்கும் போது மிக பெரிய ஆச்சரியம் மட்டுமே மிஞ்சும். படைப்பாளியின் வாழ்வில் இன்னென்ன எழுத வேண்டும் என்று என்றுமே திட்டம் போட்டு செய்ய முடியாது என்று மீண்டும் அக்கூட்டத்தில் விளங்கிற்று. அம்மா இறந்த பிறகு அவரை பற்றி எழுதிய இரண்டு கட்டுரைகளின் வழியாக புத்தகத்தின் மூலக்கரு உருவாகி, அம்பை மற்றும் கண்ணன் பரிந்துரைக்க அவருடையதோன்றாத் துணைஇப்படியொரு புத்தகமாக உருமாறியிருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளரும் அவருடைய ஒவ்வொரு படைப்பும் கருவாக உருவாகிய தருணத்தை பற்றிக் கூறி அதை தொகுத்தால் நன்றாக இருக்கும். தோன்றாத் துணையின் உந்துதலில், இப்புதினத்தில் சொல்லாமல் விடப்பட்ட சிலவற்றை வைத்துக்கொண்டு அடுத்து ஒரு நாவல் (அவர் அம்மாவை பற்றி) எழுத போவதாக கூறினார். ஒரு படைப்பு இன்னொரு படைப்பை கொடுக்க வல்லதும் தானே.

நிகழிச்சியின் தொடர்ச்சியாக, புத்தக வாசிப்பும், பொதுவான கேள்வி பதில்களும் நடைபெற்றன. கேள்விகள் அனைத்தும் (என்னுடையதும் சேர்த்து தான் சொல்கிறேன்) ஆரம்ப நிலை வாசகர்கள் கேட்க கூடிய கேள்வியாகவே இருந்தன. ‘எப்படி சார் எழுதுனீங்க?’ போன்ற வகையறாக்கள். ஆனாலும் பெருமாள் முருகன் அவருக்கே உரித்தான மென்புன்னகையோடு அனைவரது கேள்விகளுக்கும் நிதானமாக பதில் அளித்தார். நிகழ்ச்சியிலிருந்து சில அரிதான தருணங்களை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். ஒரு படைப்பு அதன் காலத்தை தாண்டி நிற்க வேண்டும் என்றால் அதிலுள்ள தரிசனம் முக்கியம் என்று கூறினார். தமிழிலக்கிய கூட்டத்தில் தொடர்ந்து பங்கு பெரும் வாசகர்களுக்குதரிசனம்என்பது பிரபலமான சொல் தான். அங்கிருந்த கூட்டத்திற்கு அந்த கலை சொல்லிற்கான முழு அர்த்தம் தெரியுமா என்பது தெரியவில்லை. வெறும் கோட்பாடு சார்ந்து மட்டுமே புரிந்துகொள்ளும் சிலர் அந்த தரிசனம் என்ற வார்த்தையின் உள்ளர்த்ததை ஏதேனும் ஒரு படைப்பின் வழி உணர்ந்திருக்கிறார்களா என்று அவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும். பெருமாள் முருகன் அவர் அம்மாவின் இறுதி காலத்தை பற்றி கூறும் போது அம்மாவின் மன உள்கிடங்கில் வேரூற்றிருந்தஜாதி பார்த்தல்மன அமைப்பைப் பற்றிக் கூறினார். அவருடைய (அம்மா) உடல் நிலை காரணமாக உதவிக்கு வைக்கப்பட்ட துணையின் சாதியை அறிய முற்பட்டார் என்பதே பெருமாள் முருகன் கூறிய சிறிய நிகழ்வு. முன்பொரு முறை பெங்களூர் பத்திரிகை ஒன்று எப்படி அதை பூதாகாரமாக்கிபெருமாள் முருகனின் அம்மா சாதி வெறியர்என்று செய்தியை வெளியிட்டது என்று கூறினார். மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு கேள்விக்கு, எப்படி மொழிபெயர்ப்பாளருடன் உண்டான ஓர் உரையாடல் அவருடைய மூல கதையின் ஒரு பகுதியையே மாற்றியமைத்தது என்று கூறினார். எழுதும் போது மனம் இட்டுச்செல்லும் பாதைகளில் பயணித்து, ஆக்கத்தை அச்சுக்கு கொண்டு வந்த பிறகு, மொழிபெயர்ப்பாளருடன் உரையாடிய பின் சில பகுதிகளில்  தனக்கே தெளிவு இல்லை என்பதை உணர்ந்து அதை மாற்றி அமைத்ததாக ஓர் எழுத்தாளர் கூறியது எனக்கு புதிதாக இருந்தது.

மொழிபெயர்ப்பு, கோழையின் பாடல்கள், அவருடைய ஆசான்கள், அரசு விருதுகள், பகடி இலக்கியம் என்று கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. 7 மணிக்கு முடிய வேண்டிய நிகழ்ச்சி நீண்டு 7.30 மணி போல் நிறைவுற்றது. பெங்களூர் வாழ் இளம் (உண்மையிலேயே இள வயது தான் 🙂 ) தமிழ் எழுத்தாளர்கள் வருவார்கள் என்று நினைத்தேன். யாரும் வரவில்லை. நிகழ்ச்சி முடிந்தபின் அவரை சுற்றி அவருடைய கையொப்பத்திற்காக காத்திருந்த அனைவரிடமும் சிரித்து பேசி கொண்டிருந்தார். நிகழ்ச்சி முழுவதும் காணொளிக்காக பாய்ச்சப்பட்ட வெளிச்சத்திலிருந்து விடுப்பட்டவராக பெருமாள் முருகன் சற்று ஆசுவாசமடைந்தார். அவர் எவ்வளவு முயன்றாலும் அவர் மீது சில வருடங்களுக்கு முன் செலுத்தப்பட்ட ஒளியை விட்டு அகல முடியாது என்பதே உண்மை. இன்னும் பல மாநிலங்களில், பல நாடுகளில், பல மனித மனங்களில் வெவ்வேறு படைப்புகள் வழியாக மாதொருபாகனாக அவர் இருக்கப் போவதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை

பிரசன்னா பெங்களூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஆவார். அவர் முக்கியமாக சிறு கதைகள் மற்றும் புத்தக மதிப்புரைகளில் கவனம் செலுத்துகிறார். பல்வேறு தமிழ் இலக்கிய பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s