பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா 2019

பல்வேறு நாட்டு படங்கள் திரையிடப்படுவதால் பெரிய திரையில் பல்வேறு நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் கண்டு அனுபவிப்பதன் மூலம் உலகை சுற்றி வரும் அனுபவம் கிளர்ச்சியுற செய்வது.

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா என்றதுமே ஒருவரின் மனதில் PVR, அதன் சௌகரியமான சிவப்பு நிற மெது இருக்கைகள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உத்திரங்கள், வாங்க மனமே வராத விலையில் விற்கப்படும் பாப்கார்ன் மற்றும் காப்பி, முன்பின் தெரியாத முகங்களுடன் Ingmar Bergman, Adoor Gopalakrishnan, Satyajit Ray, Tarkovsky என்று அலசி ஆராய்தல், கழுத்தில் எப்போதும் தொங்கவிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜோல்னா பையிற்குள் திணிக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களின் அட்டவணை, சிறு குறிப்பு அடங்கிய புத்தகம்என வேற்றுலகில் சஞ்சரிக்கும் ஆசை உள்ளிருந்து மேலெழும். இவை எல்லாவற்றிற்கும் மேல் பல்வேறு நாட்டு படங்கள் திரையிடப்படுவதால் பெரிய திரையில் பல்வேறு நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் கண்டு அனுபவிப்பதன் மூலம் உலகையே சுற்றி வரும் அனுபவம் கிளர்ச்சியுற செய்வது.  

பொதுவாக இந்தியாவின் அனைத்து திரைப்பட விழாக்களும் மூட்டை கட்டி அடுத்த வேலையை பார்க்க போகும் நேரத்தில் தான் பெங்களூரு திரைப்பட விழா தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். பெங்களூருக்கென்றே உள்ள தனி அடையாளமாக நான் காண்பது, ஏதேனும் வகையில் தனித்து நிற்பது. அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி. பிற நகரங்களில் நடக்கும் திரைப்பட விழாக்களுடன் ஒப்பிட்டு இந்த கட்டுரையை எழுத எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், நான் சென்னை மற்றும் பெங்களூரு திரைப்பட விழாக்களில் மட்டுமே பங்கு பெற்றிருக்கிறேன். அதுவும் கடந்த மூன்று நான்கு வருடங்களாக தான். ஆனால் திரைவிழாவிற்கு வரும் முதியோர்கள் அல்லது திரைப்படம் காண்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்கள் பலர் பிற மாநில விழாக்களுடன் ஒப்பிட்டு பெங்களூரு திரைப்பட விழாவின் சாதக பாதகங்களை அடுக்குவர். மனிதர்களுக்கு ஒப்புமை என்பது சிந்தையிலிருந்து அகற்றப்பட முடியாதது. ஒவ்வொரு நொடியும் தாமிருக்கும் ஒன்றை வேறொன்றுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கும் மனம் நம் அனைவருக்கும் வாய்த்திருக்கிறது. அதிலிருந்து முரண்டு பிடித்து வெளியே வந்தால் மட்டுமே தன்னிலை புரிந்து அதை அனுபவிக்கவும் முடியும்.

ஒரு மாதத்திற்கு முன்னரே இணையத்தில் எப்போது வருகையாளர் பதிவை திறப்பார்கள் என்று காத்திருந்து, திறந்தவுடன் முதல் நாளே அங்கே பதிவு செய்து சம்பந்த பட்ட நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களையும் பிடிவாதமாக பதிவு செய்ய வைத்து, உடனிருக்கும் சிலரை 800 ரூபாயில் 35 படங்கள் வரை பார்க்கலாம், அதுவும் PVR இல் என்று கொக்கி போட்டு சிலரை இழுக்க முயன்று, அவர்கள் எந்த மாதிரியான படங்கள் என்று வினவ நாம் எடுத்துரைக்கும் போதே அவர்களின் முகங்கள் அஷ்டகோணலாகி அவர்கள் நுட்பமான முறையில் நம் மனம் காயப்படாமல், வேண்டாம் என்று மறுத்து, விழா துவங்கவும் நாட்களை எண்ணி எண்ணி களிப்பில் மூழ்குவது என்பது எல்லோருக்கும் வாய்த்தது அல்ல. விழா நாள் நெருங்க நெருங்க, இணையத்தில் (BIFFES.IN) படங்களின் வரிசையை பார்ப்பதும், நமக்கு பிடித்த முந்தைய தலைமுறை ஜாம்பவான் இயக்குனரின் படங்கள் சிறப்பு காட்சிகளுக்கு தேர்வாகி இருக்கிறதா என்று ஏங்குவதும், பட வரிசையிலிருந்து சிலவற்றை உருவி முன்னே அப்படத்தின் கதைச்சுருக்கத்தை இணையத்தில் தேடி படிப்பதும், அட்டவணையை வைத்துக்கொண்டு முன்னரே எந்த நாளில் எந்தெந்த படங்கள் காண வேண்டும் என்று முடிவெடுப்பதும், திரைப்படங்களின் மீதுள்ள காதலன்றி வேறில்லை

A still from Sivaranjani and other women (India, Tamil, Sai Vasanth).

திரைப்பட ‘விழா’ என்பது மிக சரியான சொற்பிரயோகம். விழா மனநிலை விழாக்கள் ஆரம்பமாகும் சில நாட்களுக்கு முன்னரே தொத்திக்கொள்வது போல் 3, 4 நாட்களுக்கு முன்னரே அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு முன் அனுமதிபெறப்பட்ட ஒரு வார விடுமுறையை மீண்டும் அலுவலகத்தின் மேலதிகாரியிடம் தெரிவிப்பது நம்முடைய ஆர்வக்கோளாறை எடுத்துரைக்கும். பெங்களூரிலேயே வாழும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் சிலர் முழுதாக ஒரு வாரம் விடுமுறை எடுப்பர். சிலர் வார இறுதிகளில் மட்டும் வருவர். 

ஒரு வழியாக விழா நாள் வந்துவிட தூக்கம், பசி, காமம், நண்பர்கள், அலுவலக வேலை, காதலி, என்று பல லௌகீக அழைப்பணைத்திற்கும் தற்காலிக விடைகொடுத்து நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் 7 நாட்களில் 35 படங்கள் பார்க்கும் மனநிலைக்கு உந்தப்பட்ட திரைப்பட வெறியர்களுக்கு மட்டும். வார இறுதிகளில் மட்டும் வருபவர்கள் வருடத்தின் முக்கியமான படங்கள் என்று முன்னரே பலரால் இணையத்தில் பரிந்துரைக்கப்பட்ட படங்களை மட்டுமே கண்டு திரும்புவர். சிலர் ஏழு நாள் என்பது தலைவலி என கருதி நல்ல படங்கள் என்று அவர்கள் காதிற்கு எட்டிய படங்கள் வார நாட்களில் திரையிடப்படுவதாக இருந்தால் அலுவலகங்களில் அனுமதி பெற்று வருவர்

விழா நாளன்று இரு சக்கர வாகனங்கள் பல படை திரண்டு ஓரியன் மாலின் வாயிற்கதவில் 9 மணிக்கு காத்திருக்கும். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து, கடைசி தளத்தில் அமைந்திருக்கும் திரை அரங்கிற்கு சென்றதுமே அடையாள அட்டையை வாங்குவதற்காக இருக்கும் கூட்டத்தை கண்டு சற்று பயம் உள்ளே நுழையும். அடையாள அட்டைகள் அனைத்தும் நாம் பதிவு செய்த நாளின் குறிப்போடு பிரிக்கப்பட்டிருப்பதால், விரைவில் ஒவ்வொருவரும் தனக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்வர். 3 வருடங்களில் நான் கண்டுணர்ந்தது, ஒவ்வொரு முறையும் அடையாள அட்டை கொடுக்கும் செயல்முறை செறிவாக முன்னேறி கொண்டிருப்பது தான். விழாவை ஒருங்கிணைத்து நடத்தும் அனைவரும் இந்த ஒரு வாரத்தை பணிச்சுமை மிகுந்த வாரமாக கருதுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்களின்றி இந்த விழாவும் சாத்தியமில்லை. எப்படியும் யாரோ ஒருவர் அங்கு அடையாள அட்டை வழங்கிக்கொண்டிருக்கும் இளைஞரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவார். காரணம் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விழா நடத்துபவர்கள் சென்ற விழாவில் நிகழ்ந்த தவறுகள் எதுவும் நடந்து விட கூடாது என்று முனைப்பாக இருந்தாலும் அவர்களையும் மீறி ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து கொண்டே இருக்கும். பொது மக்கள் பங்குபெறும் விழாக்களில் புதிய தவறுகள் இன்றி அரங்கேறுவது என்பது விதிவிலக்கு

வயதானோருக்கான தனி வரிசை பெங்களூரு திரைப்பட விழாக்களின் தனி சிறப்பு என்று நினைக்கின்றேன். முதியவர்கள் இந்த ஏழு நாட்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அரங்கினுள்ளே நுழைய அவர்களுக்கு தான் முன்னுரிமை. வேண்டிய இருக்கையை நிதானமாக தேர்ந்தெடுத்து வசதியாக உட்கார்ந்து பார்க்கும் பாக்கியம் அவர்களுக்கு கிட்டுகிறது. என் போன்ற நடுவயதுக்காரர்கள் முட்டி மோதி மட்டுமே எந்த திரைப்படத்தையும் காண முடிகிறது. முந்தைய வருடங்களில் முதல் நாள் மட்டுமே திரை அரங்கம் சற்று வெறிச்சோடி இருக்கும். சனி காலையிலிருந்தே மக்கள் ஏக கூட்டமாக கூடி விடுவர். உண்மையான விழா என்பது சனி காலையிலிருந்து தான் துவங்கும். ஆனால் இம்முறை (2019), முதல் நாளான வெள்ளி மதியத்திலிருந்தே மக்கள் கூட்டம் திணறவைத்தது. கலை படங்களை காணும் மக்கள் அதிகரித்து விட்டார்களா அல்லது 800 ரூபாயில் PVR இல் பல படங்களை பார்க்கலாம் என்ற ஆசையிலோ, பெரிய திரையில் தணிக்கையின்றி பல உடலுறவு மற்றும் அம்மண காட்சிகளை காணலாம் என்றோ மக்கள் கூடி விட்டனரா என்று அறியேன். ஆனால், நிச்சயம் மக்களின் பெருந்திரள் என்பது விழா மன நிலையை கடத்த வல்லது

திரைப்பட வெறியர்களுக்கு என்று சில விதிகளுண்டு. அதாவது ஒரு நாளுக்கு எப்படியும் 5 படங்கள் (முடிந்தால் 5.5 அல்லது 6 படங்கள்) பார்த்தே ஆக வேண்டும் என்னும் ஆவல் உள்ளவர்கள் முதல் காரியமாக காலை உணவை வெகு சிரத்தை எடுத்து தங்களின் கொள்ளளவிற்கு மேல் திணிக்க வேண்டும். உள்ளே என்ன தான் 60% கழிவில் பாப்கார்ன் மற்றும் இதர உணவுகள் விற்கப்பட்டாலும், ஏழு நாட்களும் அங்கே உண்பது என்பது பொருளாதாரத்திற்கு கட்டுப்படியாகாது. மேலும் அவர்கள் கொடுக்கும் உணவளவு என்பது 10 வயது சிறுவர்களுக்கானது. 5 படங்களை பார்க்கும் ஒருவனால் வெறும் அந்த உணவை கொண்டு ஒரு நாளை கடப்பது என்பது கடினமே. ஆதலால் மாலிற்கு அருகில் 200 அடி தூரத்தில் அமைந்திருக்கும் ரோட்டோர கடைகளில் காலை உணவை பிரம்மாண்டமாக முடித்துவிட்டு, படங்களுக்கு இடையில் நேரம் கிடைக்கும் பாக்கியம் பெற்றால் மதிய உணவை 4 மணி வாக்கில் முடித்து விட்டு வரலாம். ஆனால் அப்படியெல்லாம் நேரம் கிடைப்பது அரிதிலும் அரிது. இரண்டாவதாக, உடை மற்றும் சுமைகள். குளிர் காலம் முடிந்து சுக்கிரன் எட்டி பார்க்கும் பருவத்தில் தான் பெங்களூரு திரை விழா எப்போதும் நடைபெறும். காற்றோட்டமான உடைகளும், அதை விட முக்கியமாக குறைந்தளவு கை அல்லது தோல் சுமைகளும் முக்கியம். விழாவில் கொடுக்கப்படும் அட்டவணை, படங்களை பற்றிய சிறு குறிப்பு தாங்கிய குறும்புத்தகம் மட்டும் சுமந்துகொண்டால் போதுமானது. அதை விட முக்கியம் சிறிய தண்ணீர் போத்தல். அவர்களே கொடுக்கும் சிறுபையினுள் அடைபடுமாறு அமைந்த போத்தல் அவசியம். உடமைகளில் இவ்வளவு கருமியாக இருக்க இன்னொரு காரணம், காப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் உங்களது உடமைகளை சோதிப்பார்கள். இந்த ஏழு நாட்களில் நீங்கள் அவர்களுடன் நெருங்கிய நட்பு கூட வளர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், சிரித்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்காக உள்நுழையும் போதும் உங்களது பையினை சோதிக்காமல் உள்ளே அனுப்ப மாட்டார்கள். கர்ம சிரத்தையாக சோதித்த பைகளையே மீண்டும் மீண்டும் சோதிப்பார்கள்

11 திரைகள், அதில் 8 திரைகள் குறைந்தது 250 இருக்கைகள் அடங்கியது. 3 திரைகள் (Gold class) சொற்ப இருக்கைகள் மட்டுமே இருந்தாலும் மிகவும் வசதியான இருக்கைகள் கொண்டது. இந்த வருடம் இங்கிமார் பெர்க்மானின் அனைத்து படங்களும் சிறப்பு காட்சிக்காக அந்த மூன்று திரைகளில் மட்டுமே திரையிடப்பட்டது. இது ஒரு நல்ல யோசனை. வெள்ளை கருப்பு படங்களை பார்க்கவோ, அல்லது ஏற்கனவே உயர்தர நிலையில் இணையத்தில் கிடைக்கும் படங்களுக்கோ மக்கள் கூட்டம் பெரிதும் சேராது. ஆதலால் 48 இருக்கைகள் மட்டுமே கொண்ட குட்டி திரை அரங்கம் போதும். இங்கிமார் பெர்க்மானை கொண்டாடும் விசிறிகள் மட்டுமே இந்த காட்சிகளுக்கு வருவார்கள். மேலும், பெர்க்மானின் படங்களை பெரிய திரையில், அதுவும் Gold class இல் பார்ப்பது என்பது பெர்க்மானின் விசிறிகளுக்கு பிறகெப்போதும் அமையாது

பொதுவாக அரங்கின் வெளியே அமையப்பெற்றிக்கும் வெளியில் மக்கள் ஐந்து செய்லகளை செய்துகொண்டிருப்பார்கள். ஒன்று, அடுத்து என்ன படம் பார்க்கலாம் என்ற தீவிர யோசனையில் மூழ்கியும், IMDB இல் படத்தின் மதிப்பெண்ணை அலசியும், கதை சுருக்கத்தை படித்தபடியும், இது வரை பார்த்த படங்களை ஒரு பேனாவால் குறித்துக்கொண்டும் இருப்பர். இரண்டாவது, ஒரு படம் முடிந்தவுடன் கிடைக்கும் சொற்ப நேரத்தில் இயற்கை அழைப்புகளுக்கு பதிலுரைப்பர். மக்கள் அங்குமிங்குமாக கழிப்பறைக்கு போய் கொண்டும் வந்து கொண்டும் இருப்பர். மூன்றாவது, குறைந்த விலை என்று ஆசை காட்டி விற்கப்படும் பாப்கார்னையும், காப்பியையும், சமோஸாவையும் வாங்கி வாயில் திணித்துக் கொண்டிருப்பர். நான்காவதாக, அறிமுகமில்லா புது நண்பர்களோடு இது வரை பார்த்த படங்களையும் அதன் இயக்குனர்களையும் கிழி கிழி என்று கிழித்து தொங்கவிடுவர் அல்லது புகழ் மாலைகள் சூடி மகிழ்ச்சி கொள்வர். சிலர், தான் எவ்வளவு பெரிய கலாரசிகன் என்று காண்பிப்பதற்காக அவரது திரை விழா அனுபவங்கள் அனைத்தையும் எதிருள்ளவருக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, எடுத்துரைப்பர். ஐந்தாவதாக, படங்கள் பல கண்டு, பார்த்ததில் வெறும் 30% படங்கள் மட்டுமே தேறும் என்று மனதார உணர்ந்து, அலுவலக எண்ணங்களாலும், வீட்டில் உறவுகளின் தொந்தரவுகளாலும் அலைக்கழிக்கப்பட்டு, பார்த்தது போதும் கிளம்பிவிடலாமா என்று யோசித்து முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பர்இவை எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு காமிரா காணொளியாக எடுத்துக்கொண்டே இருக்கும். சிலரை நிறுத்தி வைத்து விழா எப்படி உள்ளது, எந்தெந்த படங்கள் நல்ல படங்கள் என்று கருத்துக் கணிப்பு வாங்கிக்கொண்டிருப்பர் சில ஊடக துறை அன்பர்கள்

ஒவ்வொரு படத்திற்கும்  நிற்கும் வரிசையை பார்த்தல் ஒரு தனி அனுபவம். முக்கியமாக முன்னரே பெயர் வாங்கிய படங்கள். இம்முறை ஜப்பானிய படமான ‘Shoplyfters’, ஆஸ்க்கார் விருது வென்ற ‘Roma’ போன்ற படங்களுக்கு மக்கள் முட்டி மோதிக்கொண்டிருந்தனர். உண்மையிலேயே முட்டி மோதும் காட்சி என்பதை நீங்கள் கண்டுணர வேண்டுமென்றால் திரை விழாவிற்கு வந்தால் போதும். இது போன்ற படங்களுக்கு வரிசை எங்கு ஆர்மபித்து எங்கு முடிகிறது என்று கணிக்கவே முடியாது. அதன் போக்கில் நீண்டு கொண்டே இருக்கும். சில படங்களுக்கு மக்கள் 1.5 மணி நேரத்திற்கு முன்னரே காத்திருக்க வேண்டியிருக்கும். 1 மணி நேரமாக காத்திருந்தும் இடம் கிடைக்காமல் போனவர்கள் நிறைய பேர். பொதுவாக இது போன்ற பெருவாரியான புகழை அடைந்த படத்திற்கு இடம் கிடைக்காமல் கோபமுறும் மக்கள் ஒருங்கிணைப்பாளர்களிடம் வாக்குவாதத்திற்கும் சண்டைக்கும் செல்வர். இவ்வாறாக சண்டையிடும் மக்கள் ஒரே ஒரு விஷயத்தை தவற விடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கை கிடைக்காமல் போவதற்கு முதல் காரணமே அங்குள்ள பார்வையாளர்களின் அறமற்ற செயல்கள் தான். திடீரென்று சிலர் கூட்டத்தின் நடுவே உள்நுழைவர். அவரை தடுத்து கேள்வி கேட்டால் குரல்கள் உயர்ந்து அங்கேயே இன்னொரு சச்சரவு முளைக்கும். ஒருங்கிணைப்பாளர்கள் முடிந்தவரை கூட்டத்தை சரிசெய்து பிரச்சைனையின்றி இது போன்ற படங்களின் காட்சியை முடித்து விட நினைப்பர். ஆனாலும், பெரிய சச்சரவுகள் இன்றி இது போன்ற ஜனரஞ்சக படத்தை காட்சி படுத்தமுடியாது என்பது அவர்களும் அறிந்ததே. சில நேரங்களில் பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சில படங்களை மற்றொரு முறை காட்சியளிக்கவும் முனைவர். பொதுவாக பெங்களூரு திரை விழாவில் கிட்ட தட்ட 50% படங்கள் இரண்டு முறை காட்சி படுத்த படும். அப்படியும் சில படங்கள் அதீத எதிர்பார்ப்பினால் மக்களின் கோரிக்கையால், மிரட்டலால், மூன்று முறை கூட காட்சிப்படுத்தப்படுவதுண்டு என்று நினைக்கிறேன்

பல சமயங்களில் பல திரைப்படங்களின் திரையிடப்படும் நேரமும், திரை அரங்கமும் மாற்றி அமைக்கப்பட்டு கொண்டே இருக்கும். அது ஒன்று தான் என் போன்ற பார்வையாளர்களுக்கு உளைச்சலை கொடுக்கும். ஏனென்றால், முன்னரே அன்றைய நாளின் துவக்கத்தில் நேரத்தை பகுத்து பிரித்து இந்தெந்த படங்களெல்லாம் காண வேண்டும் என்று ஒரு வரைபடத்தை தீட்டி வைத்துக் கொண்டு வந்தால் இந்த திடீர் மாற்றங்கள் முற்றிலும் கெடுத்துவிடும். அதற்கேற்றாற் போல் நம்முடைய அட்டவணையை மறுபடியும் மாற்றி அமைக்க வேண்டும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

இவ்வாறாக பல எதிர்பாரா மனிதர்களையும் தருணங்களையும் எதிர்கொண்டு, இயற்கை அழைப்புகளுக்கு சற்று விடைகொடுத்து 7 நாட்களும் நான் கண்ட படங்களின் பெயர்களை கீழே உதிர்த்துள்ளேன்.

Feb 22, Friday

1) Sheeple (Iran)

2) Eternal Winter (Hungary)

3) The Heiresses (Paraguay)

4) Capernaum (Lebanon)

5) The Guilty (Denmark)

6) Breathe (Argentina)

Feb 23, Saturday

7) One Day (Hungary)

8) Ayka (Kazaksthan)

9) Birds of Passage (Colombia)

10) My Masterpiece (Argentina)

11) Ava (Iran)

Feb 24, Sunday

12) Unremember (Brazil)

13) The other side of hope (Finland)

14) The Realm (Spain)

15) Silence (Sweden, Ingmar Bergman)

16) Ricordi? (Italy/France)

Feb 25, Monday

17) Rona, Azim’s mother (Afghanistan)

18) Loveling (Uruguay)

19) Bomb A love story (Iran)

20) Cold War (Poland)

21) Pause (Cyprus/Greece) 

Feb 26, Tuesday

22) Sivaranjani and other women (India, Tamil, Sai Vasanth)

23) Her Job (Greece)

24) Retablo (Peru)

25) Dressage (Iran)

26) The third wife (Vietnam)

Feb 27, Wednesday

27) Our struggles (Belgium)

28) Screwdriver (Palestine)

29) Aga (Bulgaria)

30) Foxtrot (Israel)

Feb 28, Thursday

31) Too late to die young (Chile)

32) The reports on Sara and Saleem (Palestine)

33) Hendi and Hormoz (Iran)

34) Wild Strawberries (Sweden, Ingmar Bergman)

35) And breathe normally (Iceland)

இதில் குறிப்பிடும் படியாகவோ அல்லது எனக்கு நெருக்கமான படைப்பாகவோ நான் எண்ணுவது 10 திரைப்படங்களை. பெரும்பாலும் யதார்த்தவாத படங்கள் தான். ஏதோ ஒரு உணர்வு நிலையை நம் முன் காண்பிக்க மனிதர்களின் வாழ்க்கையை எந்த வித செயற்கை தன்மையும் அற்று திரைக்கு கொண்டு வந்து உணர்வை கடத்தும் படங்கள் தான் ஏராளம். சில படங்கள் அம்முயற்சியில் நிச்சயமாக தோல்வி அடைந்திருக்கிறது என்று கூற முடியும்.

சில படங்களை நல்ல படங்கள் என்று நம் மனதினுள் நாம் நினைப்பதற்கே சற்று தயங்குவோம். எது நல்ல படம் என்று நம்முள் வகுத்துக்கொண்ட பிறகு தான் நல்ல/கெட்ட/மொண்ணை படங்கள் என்று பகுத்தறிய முடியும். ‘நல்ல திரைப்படம்என்பதற்கு என்னுள் நான் வகுத்துக்கொண்ட சில கூறுகளை கொண்டு முக்கியமான இரண்டு திரைப்படங்களை பற்றி சிறு குறிப்பு வழங்க விழைகிறேன். Foxtrot மற்றும் Eternal Winter. அபத்தத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த வாழ்வின் முடிச்சை எந்த வித ஆர்பாட்டமுமின்றி வெவ்வேறு திரை தொனிகளில் கூறும் படம் Foxtrot. படத்தின் இறுதியில் நிச்சயம் பார்வையாளர்கள் பாரமான மனதுடன் அதே நேரம் துயர் கலந்த குரும்புன்னகையோடும் வெளியேறுவர். இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் அமைந்த Eternal Winter, நம்பிக்கைக்கும் காதலிற்கும் இடையில் நடக்கும் போரை பற்றி பேசுகிறது. இந்த படத்தின் இறுதியும் ஏதோ ஒரு வாழ்வியல் பாடத்தை நமக்கு விட்டு செல்கிறது. எந்த ஒரு படைப்பும் கலையாக எந்த புள்ளியில் மாறுகிறது என்பது மிகவும் முக்கியம். அந்த புள்ளியை நோக்கி படைப்பு இயல்பாக நகர்ந்து சென்றால் அந்த படைப்பிற்கு காலம் தாண்டி திரை ஆர்வலர்களின் மனதில் ஊன்றி நிற்கும் வல்லமை அமையப்பெறும்.

மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு திரைப்படத்தை பற்றியும் என் தனிப்பட்ட எண்ணங்களை தொகுத்து வழங்கினால் 50 பக்கங்களுக்கு மேல் செல்லும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு திரைப்படத்தையும் மறுமுறை பார்த்து, அந்த படைப்பிற்கான முழு கவனத்தையும் செலுத்தி மட்டுமே அந்த மதிப்புரை/விமரிசன கட்டுரையை எழுத முடியும். ஒரு படத்தை ஒரு முறை மட்டுமே பார்த்து விட்டு விமரிசனம் செய்வது சற்று கடினம் என்றே நினைக்கிறேன். அதுவும் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்கள் அனைத்தையுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்களின் துணையுடன் மட்டுமே காண முடியும். கீழே வசனத்தை படிப்பதா, திரையில்வரும் காட்சியை பார்ப்பதா என்று சற்று குழப்பம் ஏற்படும். படங்களை காண காண, நம் கண் வசனத்திற்கும் காட்சிக்கும் இடையே அலைந்துக்கொண்டு ஒரு வகையான நடனத்தை புரிந்துக்கொண்டிருக்கும். கண்கள் பழக பழக எளிதாக, இயல்பாக, இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் பயிற்சியை பெற்றுவிடுவோம். The Realm போன்ற படங்களை பார்க்கும் போது மட்டும் சிறப்பு பயிற்சி தேவை. வசனங்களால் மட்டுமே நிரம்பி வழியும் படமது. திரையின் அடிப்பகுதியில் ஆங்கில வசனங்கள், சுவரின் ஓரமாக படையெடுத்து சென்றுக்கொண்டிருக்கும் எறும்புகளை போல் ஊர்ந்து கொண்டே இருக்கும். மேலே காட்சிகள் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயிலை போல வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும். கண்களுக்கு மிக பெரிய சவாலாக அமையும் படங்கள் இது போன்று சில இருக்கின்றன. அதிலும் முதல் நான்கு வரிசையில் இருக்கை அமைந்துவிட்டால் கண்கள் சொல்லில் அடங்கா அவதியுறும்

திரைப்பட விழாவிற்கென்றே உள்ள இன்னொரு முக்கியமான விஷயம் படம் பார்க்கும் போது ஏற்படும் தொந்தரவுகள். நாம் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு படத்தை அருகில் இருப்பவர் உச்சுக் கொட்டிக்கொண்டே அவரருகிலிருப்பவரிடம் கீழ்மையான கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருப்பர். படம் ஆர்மபித்து சரியாக பத்தே நிமிடங்களில் துயில் நிலைக்கு சென்று குறட்டை விடுபவர் பலர். அவர்களது குறட்டை படத்தின் பின்னணி இசை போன்று அமைந்து விடுவது படம் பார்க்கும் அனுபவத்தை சிதைத்துவிடும். சிலர் படங்களில் வரும் உடலுறவு காட்சிகளை கண்டு உணர்ச்சிவசப்பட்டு சற்று நெளிவர். படத்தின் மற்ற காட்சியை விட அந்த காட்சியை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிப்பர். சிலர் எந்த வித குற்ற உணர்வுமின்றி அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பர். பார்வையாளர்களுக்கிடையில் சண்டைகள் திரை படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதே நடைபெறும். அந்த சத்தத்தால் கடுப்புற்று வேறு சிலர் அந்த சண்டையை கலைக்க முன் வருவர். இப்படி எண்ணற்ற தொந்தரவுகளுக்கு மத்தியில் ஒரு படத்தை ஆழ்ந்து ரசித்து மெச்சுவதற்கு ஒரு தனி வரம் வேண்டும். இது போன்ற திரை விழாக்களில் காண வரும் பார்வையாளர்கள் ஓரளவுக்கு ஒத்த மன நிலையுடன் தான் இருப்பர் என்றெண்ணுவது மிக பெரிய தவறு. 800 ரூபாயில் பல படங்கள் என்பதால் கலைப்பட ரசனையே இல்லாத கூட்டமும் விழாவிற்கு வருவது தான் கொடுமை. கட்டணத்தை உயர்த்திவிட்டால் இந்த அந்நியர்களின் தொந்தரவு சற்று குறையும் என்று நினைக்கிறேன்.

இப்படியாக 7 நாட்களை கடந்து கடைசி நாள் கடைசி திரைப்படம் பார்க்கும் போது கூறமுடியா வெறுமையும் அச்சமும் நம்முள் வந்து விடும். முழு ஏழு நாட்கள் இருட்டறைக்குள் குடிபெயர்ந்து, எண்ணற்ற வெளிநாட்டு மனிதர்களின் உணர்வுகளை, அழுகைகளை, சந்தோஷங்களை, வாழ்க்கை தரிசனங்களை கண்டு களித்த நமக்கு எட்டாவது நாளிலிருந்து யதார்த்தத்திற்கு திரும்பும் கட்டாயத்தை நினைத்தாலே உள்ளுக்குள் உண்மையிலேயே வெடித்து அழதான் தோன்றும். அந்த வெறுமையையும், கசப்பையும் கடப்பது அவ்வளவு எளிதல்ல. உணர்வுகளினால் புனையப்பட்ட வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, உச்ச தருணங்களோடு கலை புள்ளியும் சேர்ந்து திரையில் பார்த்த பிம்பங்கள் அனைத்தும் நம் கண் முன் அடுத்த சில நாட்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும். எட்டாவது நாளிலிருந்து நமக்காக காத்திருக்கும் எளிமையான, எந்த வித உணர்ச்சியும் அற்று இயங்க போகும் சோபையான வாழ்க்கை முறையை நாம் மனக்கண்ணில் காணும் போதே சமநிலை இழக்க நேரும்.

இறுதி படம் முடிந்தவுடன் பெயர்கள் போடும் போது பார்வையாளர்கள் மெதுவாக கலைந்து செல்வர். எப்போதும் அந்த கடைசி படத்தின் பெயர் வரிசையை முழுதாக பார்த்துவிட்டு அனைவரும் சென்றபின் யாருமற்ற திரையரங்கில் 5 நிமிடங்கள் தனியாக உட்கார்ந்துவிட்டு வருவதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். திரையின் அருகே சென்று முன்னிருக்கும் சிகப்பு வண்ண காலி இருக்கைகளை காணும் போது நிச்சயம் கண்கள் நிறைந்திருக்கும். வருடத்திற்கு ஒரு முறை 7 நாட்கள் கொள்ளும் காதல். இந்த விலகல் நெருங்கிய நண்பனை விட்டுச்செல்லும் துயருக்கு நிகர்.  அரங்கின் வெளியே உள்ள இடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் விழாவை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த மகிழ்ச்சியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பர். இந்த ஒருங்கிணைப்பாளர்களில் ஒவ்வொரு வருடமும் நான் காணும் சிலர் உண்டு. அவர்களுடன் சென்று நாமும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றும் தோன்றும். வேறு வழியே இன்றி திரை அரங்கத்தை விட்டு வெளியே வந்தால் எதார்த்த உலகம் நம்மை சிரிப்புடன்வா வா.. வந்து தானே ஆகணும்என்று வில்லனின் தொனி கலந்த குரலில் நம்மை பரிகசிக்கும்

இவ்வாறாக மன வருத்தத்தோடு அடுத்த திரைப்பட விழாவிற்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு தெருவில் நடந்து கொண்டிருந்தேன். ஓரியன் மாலில் ஒரு துணி கடையில் வேலை செய்யும் ஒருவர் என்னுடன் கூடவே நடந்து கொண்டிருந்ததை கவனித்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். என்ன தான் திரைப்பட விழா என்றாலும் என்னை போன்ற அடையாள அட்டையை சுமந்து கொண்டு ஏதோ ஒரு தீவிர பாவனையில் மாலிற்குள் அங்கும் இங்கும் உலவும் ஆசாமிகளை பற்றி அங்கேயே மற்ற கடைகளில் வேலை பார்ப்பவருக்கு விளங்கிக்கொள்ள முடியாது. 7 நாட்களும் என் போன்ற ஆட்களை அவ்வப்போது கண்டு என்ன நடக்கிறது என்று புதிராகவே பார்த்துக்கொண்டிருப்பர். ஒரு சிலர் துணிந்து கேட்டுவிடுவர். 7 நாட்கள், பல உலக திரைப்படங்கள் என்று கூறும் போதே அவர்கள் புரியாமல் முழிப்பர். என்னுடன் வந்துக்கொண்டிருந்தவரும் ஆச்சரியமாக, ‘7 நாட்களும் வெறும் திரைப்படங்கள் மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தீர்களா?’ என்றார். ‘ஆம்என்றேன். ‘அலுவலகத்திற்கு இதற்காகவே விடுப்பு எடுத்தீர்களா?’ என்றார். மீண்டும்ஆம்என்றேன். என்னை குழம்பிய பார்வையில் கண்டு ஏதேதோ கேட்க முற்பட்டார். பின்னர் அவராகவேநான் அஸ்ஸாம் லேர்ந்து வரேன்.. ரொம்ப கம்மி சம்பளம், குடும்பம் அங்கேயே இருக்கு, இந்த வருஷமாவது வீட்டுக்கு போகணும், போகமுடியுமானு தெரியல..’ என்றார். நொடி நேரத்தில் என்னுள் எழுந்த கழிவிரக்கம் பெருக்கெடுத்து குற்றவுணர்வும் வந்தமர்ந்து கொள்ள எத்தனித்த போது, திரையில் நான் கண்ட பல வெளிநாட்டு எதார்த்தவாத படங்களின் ஒரு கதா பாத்திரமாக அவர் முன்னே சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்தால், ஒரு கதை எழுதி அதை படமாகவும் ஆக்கிவிடலாம் என்று தோன்றியது. வந்த குற்றஉணர்வெல்லாம் மறைந்துகலை என்ற ஒன்று இல்லையெனில் இவரை போன்ற எளிய மனிதர்களை எவர் பதிவு செய்வர்?’ என்று என்னை நானே வினவிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்து சென்றேன்

Satyajit Ray

பிரசன்னா பெங்களூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஆவார். அவர் முக்கியமாக சிறு கதைகள் மற்றும் புத்தக மதிப்புரைகளில் கவனம் செலுத்துகிறார். பல்வேறு தமிழ் இலக்கிய பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


Read More :

புதினத்தினால் இயல்பாக எழுந்து வந்த தன்னுரையாடல்

Portrait of a community with its own trappings and escapes

When rain grows on you as a character


 

Advertisement

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s