அதிகாரத்தின் காலடிகளால் நசுக்கப்படுபவன்

Forgot password?

Delete Comment

Are you sure you want to delete this comment?

அதிகாரத்தின் காலடிகளால் நசுக்கப்படுபவன்

"Eeb Allay Ooo" திரைப்படம் பற்றிய பார்வை

சில தினங்களுக்கு முன் என் மொட்டை மாடி அறைக்குள் ஒரு குட்டி வெளவால் ஒன்று நுழைந்தது. என்னை நோக்கி சட்டென்று அது பறந்து வந்த பின் சற்றுத் திடுக்கிட்டு விட்டேன். என் மெத்தையின் ஓரத்தில் ஓரிடத்தை பிடித்துக் கொண்டு உல்லாசமாக ஓய்வெடுக்கத் தொடங்கியது. சிறிது நேரம் கழித்து அதை விரட்ட முற்பட்டேன். சுண்டு விரல் அளவே உள்ள கருப்பு நிற சிறிய உயிரினம். ஆனால் அதை விரட்டுவதற்கு நான் பட்ட பாடு சொல்லி மாளாது. அதை எங்கனமாவது வெளியேற்ற வேண்டும் என்று பல வித முயற்சிகளில் இறங்கினேன். கை தட்டி பார்த்தேன், மெத்தையை தட்டியும் அசைத்தும் பார்த்தேன். மெத்தைக்கு அருகே இருந்த சுவரை பற்றிக்கொண்டு அழகாக தூங்கிக் கொண்டிருந்தது. வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் கையை அதனருகில் கொண்டு சென்று மெத்தையை தட்டினேன். உடலில் லேசான சிணுக்கம் ஏற்பட்டது. அதன் சிறிய உடலசைவை கண்டு எனக்கு தூக்கி வாரி போட்டது. சட்டென்று பின் நகர்ந்து விட்டேன். மனதின் படபடப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. பிறகு அது மோன நிலைக்கு சென்றது. மீண்டும் பல வித முயற்சிகள். "போடா மயிரே.. கொஞ்ச நேரம் தூங்க விடு" என்பது போல் இருந்தது அதன் எதிர்வினைகள். இனிமேல் ஆகாது என்றெண்ணி அதனிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு தாளில் அதை லாவகமாக ஏற்றினேன். மிக வேகமாக அந்த தாளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினேன். கடைசியில் என்னுடன் ஒத்துழைத்து வெளியே பறந்து சென்றது. ஒரு சிறிய வெளவாலுக்கு இவ்வளவு பயந்து ஆர்ப்பாட்டம். ஒரு குரங்கு வந்திருந்தால்???? Eeb Allay Ooo என்ற திரைப்படத்தை பார்க்கும் போது இது போன்ற எண்ணற்ற மனிதன் vs மற்ற உயிரினங்கள் தொடர்பான நிகழ்வுகள் செய்திகள் கதைகள் வந்து சென்றது. சில வெகு சாதாரணமானவை. சில மாபெரும் சமூக கவனத்தை பெற்றவை (அண்மையில் சவிட்டு வெடி வெடித்து இறந்து போன யானை விவகாரம் ஒரு சிறந்த உதாரணம்).

ஒரு திரைப்படத்தையோ, நாவலையோ ஒரே ஒரு முறை படித்துவிட்டு அல்லது பார்த்துவிட்டு அதை பற்றிய கருத்தோ, விமரிசனமோ, எண்ணங்களையோ எழுதுவது ஏதுவாக இருக்காது என்பதே என் எண்ணம். ஆனால் Eeb Allay Ooo போன்ற படங்களை வெகு விரைவாக அனைவரிடமும் சென்று சேர்க்க உடனடியாக பல கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த சிறிய கட்டுரையை எழுத முடிவு செய்தேன். We Are One என்ற Youtube chennel இல் உலக திரைப்படங்கள் (பெரும்பாலும் குறும்படங்கள்) பல பதிவேற்றப்படுகின்றன. இலவசமாக. கட்டணம் ஏதுமில்லை. நண்பன் ஒருவனின் பரிந்துரையினால் Eeb Allay Ooo என்ற திரைப்படத்தையும் அப்படி தான் பார்க்க நேர்ந்தது(தற்போது இப்படத்தை அவர்களது Youtube channel இல் நீக்கிவிட்டார்கள்) . இந்திய திரைப்படங்களில் மிக அரிதாகவே கலை அம்சம் கொண்ட திரைப்படங்கள் வரும் என்பது நமக்கு தெரிந்ததே. கரு, கதை சொல்லும் விதம், நடிப்பு, தொழில்நுட்ப தேர்ச்சி, பார்வையாளனை சிறிதளவேனும் தன்னுள் உரையாடவும், சிந்திக்கவும் வைக்கும் தன்மை, புதுமையாக ஏதோ ஒன்றை சொல்லுதல் என்று பல கூறுகள் கூடி வருவது என்பது பெரும்பாலும் அதிசயம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே நம் நாட்டு திரைப்படங்கள் அது போன்ற பல்வேறு கூறுகளின் ஒத்திசைவோடு உருவாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அமைந்து விட்டாலும் அத்திரைப்படம் சாதாரண சினிமா பார்வையாளனுக்கு ஏற்புடையதாக இருக்காது. "அய்யய்யோ.. இதெல்லாம் alternative சினிமாவா" என்று நிறைய தீவிர சினிமா பார்வையாளர்களையே துரத்தி அடிக்கும் மொண்ணை படங்கள் நிறைய நாம் திரை பட விழாக்களில் கண்டிருப்போம். ஆனால் கலைப்படம் என்றாலே தலை தெறித்து ஓடும் பார்வையாளர்கள் எங்கும் சூழ இருக்கும் நமது நாட்டில் தீவிர சினிமா ரசிகர்களையும் சாதாரண பார்வையாளர்களையும் திருப்தி படுத்தும் ஒரு படமாக அமைவது என்பதெல்லாம் Modi ஆட்சியில் இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்கள் "நான் இந்தியாவில் எந்த வித பயமும் இன்றி நிம்மதியாக வாழ்கிறேன்" என்று கூறுவதற்கு சமம். Eeb Allay Ooo அப்படியான ஒரு இடைநிலை திரைப்படமாக அமைந்தது அண்மை அதிசயங்களுள் ஒன்று.

படத்தின் கதையை இப்படியாக சுருக்கலாம். ஏதோ ஒரு கிராமத்திலிருந்து Delhi என்ற பெருநகரத்தில் நுழைந்து குரங்கு விரட்டும் வேலையை செய்து வரும் ஒரு சாதாரணனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து நகர்த்தப்படும் படம். அக்காவின் வீட்டில் தஞ்சம் புகுந்து அக்கா கணவனின் சிபாரிசினால் குரங்கு விரட்டும் வேலை கிடைக்கிறது. குரங்குடன் புரியும் சேட்டைகள், வேலையில் கவனக்குறைவு, சுய பட்சாதாபம், எவ்வளவு முயன்றும் லங்கூர் இன குரங்கின் ஓசையை தன்னுள் வர வழைக்கமுடியாமல் தவிப்பது, அனைவரிடமும் பணிந்து போதல், ஒப்பந்தக்காரரிடம் அடி வாங்கி அழுதல், சுற்றி இருக்கும் அனைவரும் தன்னை ஒரு விளையாட்டு பொருளாக நடத்தும் போது கோபம் கொள்ளுதல் என்று ஒரு தனி மனிதனின் கையறு நிலையை அஞ்சானியின் மூலமாக மிக தெளிவாக கடத்தப்படுகின்றன.

Man vs System என்ற கருதுகோளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்களில் Eeb Allay Ooo ஒரு தனித்த இடம் பெறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களில் Court (Marathi), விசாரணை (தமிழ்) போன்ற படங்களை உதாரணமாக கூறலாம். இதில் விசாரணையை வணிக படமாகவே வரையறுக்க முடியும். Court, ஒரு சிறந்த முயற்சி. ஆனால், அதை அனைவராலும் (ஒரு சாதாரண சினிமா பார்வையாளனால்) பார்க்க முடியாதென்பது Chaithanya Tamahane வின் துரதிர்ஷ்டம். Eeb Allay Ooo இந்த இரண்டு விதமான படங்களுக்கும் நடுவே நின்று அனைவரையும் பூர்த்தி செய்யும் படமாகவே அமைகிறது. நிச்சயமாக இப்படத்தை ஒரு Magic என்றே நம்புகிறேன். மிகப் பெரிய சமரசமின்றி, காய்ந்து போன மிக மெதுவாக நகரும் திரை மொழியை புறந்தள்ளி ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு புதிய தகவலை (கதாபாத்திரத்தை பற்றியோ, கதை மாந்தர்களுக்கு இடையே உள்ள உறவை பற்றியோ, கதை அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான தேவையையோ) ஒன்றை சொல்ல முற்பட்டு கதையை மிக தெளிவாக சுவாரஸ்யத்துடன் நகர்த்தி இருக்கிறார் Prateek vats.

அஞ்சானியின் உடல் மொழி, முக பாவனை, நடை, பேச்சு தொனி என்று அனைத்துமே நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறது. முக்கியமாக குரங்கிற்கு அச்சம் கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் என்னையும் துணுக்குற வைத்தது. விதியை மீறி குரங்கிற்கு வாழைப்பழம் கொடுக்க வரும் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு கெஞ்சும் போதும், சுற்றி இருக்கும் சக ஊழியர்களால் குரங்கின் கூண்டிற்குள் அகப்பட்டுக்கொண்டு எரிச்சல் அடையும் போதும், அக்காவிடம் தன் விரக்தியை ஒரு காட்சியில் கூறும் போதும் அஞ்சானியின் மீது கரைந்துருகாமல் இருக்க முடியவில்லை. அஞ்சானி படம் முழுவதும் ஒரு விதமான கூன் விழுந்த கழுத்துடன் காணப்படுகிறார். சிரம் பெரும்பாலும் நிமிர்வதே இல்லை. தாழ்வு மனப்பான்மையை, அடுத்தவரின் நிழலில் வாழும் ஒருவனின் உடல் மொழியை இவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்ததிலிருந்தே கதைக்கான நம்பகத்தன்மை அதிகரித்து விடுகிறது.

படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். அவர்களுக்கான screen space பெரிதாக கொடுக்கப்படவில்லை என்றாலும், சில காட்சிகளிலேயே அவர்கள் நமக்கு உணர்த்தப்படுகிறார்கள். அஞ்சானியின் மீது அக்காவிற்கு இருக்கும் அதிகார தொனி, அக்கா கணவரின் உடல் பலகீனம், சில நிமிடங்களே வந்தாலும் நம்மை பெரிதும் கவர்கின்ற மஹிந்தர், பக்கத்துக்கு வீட்டு செவிலியர் என்று மிக நிறைவான கதாபாத்திரங்களாக படம் முழுக்க இறைந்து கிடக்கின்றன. படம் முழுவதும் அதிகாரத்தின் குரல் எளியவர்களின் மீது ஒலித்துக்கொண்டே இருப்பது அப்பட்டமாக காட்டப்படுகிறது. இரண்டே காட்சியில் அக்காவின் வீட்டிற்கு பொருட்கள் வாங்க வரும் ஒருவர் செலுத்தும் அதிகார எல்லை மீறல், விதியை மீறி குரங்கிற்கு உணவளிக்க வரும் ஒருவரின் மிரட்டல், ஒப்பந்தக்காரரின் கண்டிப்பு மற்றும் அவர் உரிமையாக அஞ்சானியின் மீது எடுக்கும் நடவடிக்கைகள், அக்கா கணவர் துப்பாக்கியை எப்போதும் தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் என சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பவன் இல்லாதவனிடமும், வலியவன் எளியவனிடமும் காட்டும் அதிகாரம் மேலிருந்து கீழ் என்ற விதிக்கு உட்பட்டவை. அஞ்சானியின் அக்கா, அவனிடம் காட்டும் கண்டிப்பையும் அதிகாரத்தையும் கூட அப்படியே வரையறுக்க முடியும். அன்பு நேசம் பாசம் போன்ற பாசாங்குகளிலிருந்து விடுபட்டு இதை யோசிக்கும் போது மட்டுமே இப்படியான அப்பட்டமான உண்மையான உறவியக்கங்கள் புலப்படும். மஹிந்தர் உண்மையான குரங்கு விரட்டும் தொழிலில் இருப்பவர் என்று ஊகிக்கிறேன். கதையின் இறுதியில் அவர் இறக்கும் செய்தி மிக இயல்பாக போகிற போக்கில் கடந்து போகிறது. அவருடைய மரணம் அதிகார மீறலுக்கு உதாரணம். நிஜ வாழ்வில் இது போன்ற எண்ணற்ற எளிய தொழில் புரியும் மனிதர்களின் மரணம் பெரிதாக நம்மை ஒன்றும் செய்வதில்லை என்பதை நாம் உணர்ந்திருக்கலாம். ஐந்து நிமிட ஆச்சரியத்துடன் நாம் எளிதாக அந்த மரணச் செய்திகளை கடந்து விடுவோம். மஹிந்தரின் மரணம் அது போன்ற பல சாதாரணர்களின் மரணத்தை நமக்கு நினைவுறுத்தும் என்றே நினைக்கிறேன். அதற்கென்று மஹிந்தரின் கதாபாத்திரம் கழிவிரக்கத்தை வரவழைப்பதாக காட்சிப்படுத்தவில்லை. படத்தில் வெகு சொற்பமான காட்சிகளிலே வருகிறார் மஹிந்தர்.

Delhi போன்ற பெரு நகரங்களில் குரங்கினால் பொது மக்களுக்கு தொந்தரவு என்ற செய்தியே என் போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இணையத்தில் தேடி பார்த்ததில் லங்குர் இன குரங்குகளை வைத்து மற்ற குரங்குகளை விரட்டி கொண்டிருந்தார்கள் என்று அறிகிறேன். பிறகு அது தடைசெய்யப்பட்டு மனிதர்களின் உதவியை நாடிய அரசிற்கு இது ஒரு புது வேலை வாய்ப்பாக பலருக்கு அமைந்தது என்று விளங்கியது. ஒப்பந்தக்காரார்களை வைத்து இத்தொழிலுக்கு (இதை அரசாங்க தொழில் என்று அஞ்சானியின் அக்கா பெருமை படுவது பகடியாக தெறிவிக்க பட்டிருக்கும்) ஆட்களை தேர்ந்தெடுக்கிறது அரசாங்கம். இவை எல்லாம் பொது மக்கள் வாழும் இடங்களில் குரங்கின் அட்டகாசம் தாங்க முடியாமல் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள். ஆனால் யார் இடத்தை யார் ஆக்கிரமிக்கிறார்கள் என்று தெரியவில்லை. படத்திலேயே ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கும் "முன்பெல்லாம் இங்கு (Rajpath, Nirman, Udyog, Vayu and Vigyan Bhawan) குரங்கின் சாம்ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது.. நாம் தான் அதை எல்லாம் விரட்டி விட்டு கட்டிடங்களை கட்டி விட்டோம்" என்று மஹிந்தர் அஞ்சானியிடம் கூறுவார். பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கு பின் மனிதன். மனிதனிற்கும் குரங்கிற்கும் நவீன உலகில் இருக்கும் உறவை பற்றி கூறும் படைப்பாகவும் இதை பார்க்கலாம். ஒரு பக்கம் குரங்குகளை கடவுளுடன் ஒப்பிட்டு அதை வணங்கி உணவு அளித்துக் கொண்டே இருக்கும் மக்கள். இன்னொரு புறம் குரங்குகளை விரட்டும் அஞ்சானி, மஹிந்தர் போன்றவர்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து பாதி வரை படத்தின் தொனி பகடிகளாலும் எளிய சம்பவங்களாலும் நிறைக்கப்பட்டிருக்கின்றன. அஞ்சானியின் அச்சம், சோம்பல் மன நிலை, பல் வேறு விதமாக குரங்கை விரட்ட முயலுதல் என்று சுவாரஸ்யமாக நமக்குள் ஒரு குரும்புன்னகையை வர வழைத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நம்மை மயக்கி படம் வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அஞ்சானி தனக்கான தடைகளை உடைத்தெறிகிறான். லங்குர் மனிதனாக Delhi சாலைகளில் உலாவுகிறான். அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் புகழ் அடைகிறான். 'நீயா நானா' போட்டியில் குரங்குடன் முட்டி மோதி தனது எல்லையை தானே கடக்கிறான். பலர் செய்ய அஞ்சும் பல வழிகளை கொண்டு குரங்குகளை விரட்ட முயல்கிறான். ஆனால், சில பொது மக்கள் அரசாங்கத்திடம் புகார் தெரிவிக்கின்றனர். எல்லாமே அவனுக்கு பாதகமாகவே அமைகின்றன. ஒரு கட்டத்தில் வேலையை இழக்கிறான். அப்போது ஒரு அருமையான காட்சி. அது வரை குரங்குகளுக்கு பயந்து கொண்டே இருந்த அஞ்சானி திடீரென்று ஒரு காட்சியில் குரங்குகள் சூழ அமர்ந்திருக்கிறான். அதற்கு உணவு வழங்கி கொண்டிருக்கிறான். உண்மையிலேயே அவனுக்கான எதிரிகள் அல்லது அவனை துன்புறுத்துபவர்கள் குரங்குகள் அல்ல. சுற்றி இருக்கும் மனிதர்களும் அவர்களின் அமைப்புசார் மன நிலையும் தான் என்பது நமக்கு மிக எளிதாக உணர்த்தப்படுகிறது. இறுதி காட்சியான அந்த கட்டற்ற அஞ்சானியின் ஆட்டம் ஒரு மிகுந்த பாரத்தை நம்முள் கடத்துகிறது. முகம் முழுவதும் கருநிற அரிதாரங்களை பூசிக்கொண்டு சுற்றியுள்ள எவர் பொருட்டும் அஞ்சாமல் அனைத்தையும் விரக்தியினால் உடைத்தெறியும் அந்த நடனம் சிறந்த உச்சக்கட்ட காட்சி.

படத்தை எப்படி எடுத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். குரங்கின் முக பாவனைகளை, அதன் எதிர்வினைகளை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு அஞ்சானியை தனியாக படம் பிடித்திருக்க வேண்டும். சில காட்சிகளில் குரங்கும் அஞ்சானியும் ஒரே frame இல் வருகிறார்கள். அஞ்சானி அச்சம் கொள்ளும் பல காட்சிகளில் குரங்கு அஞ்சானியை நோக்கி சட்டென்று பாய்ந்து வருவதாகவும் உள்ளது. இதற்கும் மேலாக லங்குராக வேஷம் கட்டி Delhi போன்ற பெருநகரில் அஞ்சானி உலவும் காட்சிகளும், குடியரசு தின கொண்டாட்டங்களும் candid ஆக படம் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். Eeb Allay Ooo வின் மிகப்பெரிய பலம் என்பது அது உருவாக்கும் நம்பகத்தன்மை. ஒரு படைப்பு நம்மை அது நம்பும் உலகிற்குள் அழைத்து செல்ல வேண்டும். அதற்கிந்த நம்பகத்தன்மை தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் Eeb Allay Ooo போன்ற யதார்த்தவாத திரை மொழியில் அமையப்பெற்ற படங்களில் அந்த நம்பகத்தன்மையை உருவாக்க மிகுந்த கடின உழைப்பும், சற்றே அதிகமான தொழில்நுட்ப தேர்ச்சியும் இன்னும் பல நடைமுறை சார்ந்த (தேவையான அனுமதி பெற்று அசலான இடங்களில் படப்பிடிப்பு நடத்துதல், மக்கள் கூடும் இடங்களில் அவர்களை தொந்தரவு செய்யாமல் வேலைகளை முடித்தல்) விஷயங்களும் கூடி வர வேண்டும் என்று எண்ணுகிறேன். படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது Soumyananda Sahi யின் Cinematography. அவர் வேலைபார்த்த இன்னொரு படமான நசீரும் We Are One திரைப்பட விழாவில் தேர்வாகி இருக்கிறது. இந்தியாவிலிருந்து Eeb Allay Ooo மற்றும் நசீர், இரண்டே படங்கள் (feature film) தான் இந்த விழாவில் தேர்வாகியிருக்கிறது. ஆக, Soumyananda Sahi க்கு இந்த Youtube திரைப்பட விழா மாபெரும் வெளிச்சத்தையும் புகழையும் சரியான அடையாளத்தையும் கொடுக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் படமான "நசீர்" பற்றி தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

Eeb Allay Ooo மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டிய படமாகவே நான் கருதுகிறேன். நான் முன்னரே கூறியது போல் ஒரு நல்ல படைப்பை வெறும் ஒரு முறை மட்டுமே அனுபவித்து கட்டுரையோ விமரிசனமோ எழுத கூடாது. அதை நம்முள் ஊற போட்டு விட்டு வளர காத்திருக்க வேண்டும். முதல் பார்வையில் அந்த படைப்பு நம்மை ஈர்க்க வேண்டும். ஒரு படைப்பு நம்மை அழைப்பதற்கான சமிக்ஞை அது. பிறகு நாம் அதை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் நுகர வேண்டும். முதல் பார்வையில் விட்டுப்போன பல கூறுகள் மற்றும் கோணங்கள் இரண்டாம் முறை பார்க்கும் பொழுது மேலெழுந்து வரும். மீண்டும் மீண்டும் என்று அந்த படைப்பு நம்மை இழுத்துக்கொண்டே இருக்கும். நாம் படைத்திருந்தால் இப்படி அல்லவா படைத்திருப்போம், ஆகவே இது நம்முடைய படைப்பு என்ற கருத்து நமக்குள் வளரும். அந்த படைப்பை உருவாக்கியவர் மீது மிகப் பெரிய ஈர்ப்பு வரும். அவரின் அடுத்தடுத்த படைப்புகளை நாம் உற்று நோக்க ஆரம்பிப்போம். இவ்வாறு நமக்கான தனித்த ரசனையை நாம் உண்டாக்கிக்கொள்வோம். அப்படியான தனித்த கலை ரசனையை வளர்த்துக்கொள்ள Eeb Allay Ooo ஒரு சிறந்த திறப்பாக பலருக்கு அமையும் என்று நம்புகிறேன். ஆதலால், இந்த கட்டுரையை வெறும் அறிமுக கட்டுரையாக கருதி படத்தை பார்க்குமாறு படித்துக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மிக நீண்ட கட்டுரை பின் வரும் காலங்களில் இன்னும் பலரால் எழுதப்படலாம் அல்லது நானே கூட இன்னும் பல முறை படத்தை பார்த்து விட்டு இன்னும் விரிவான விமரிசனம் ஒன்றை எழுதக்கூடும்.

***

பிரசன்னா பெங்களூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஆவார். அவர் முக்கியமாக சிறு கதைகள் மற்றும் புத்தக மதிப்புரைகளில் கவனம் செலுத்துகிறார். பல்வேறு தமிழ் இலக்கிய பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Support our literary endeavours by subscribing to the FREE Newsletter service of Bengaluru Review here . Reach out to us with any queries or ideas of your own at reviewbengaluru@gmail.com.

Like
Comment
Loading comments