அடையாளமற்ற மனிதனைத் தேடி

Forgot password?

Delete Comment

Are you sure you want to delete this comment?

அடையாளமற்ற மனிதனைத் தேடி

ஆனால் அரிதாக, தூங்க கெஞ்சிக்கொண்டிருக்கும் எனது கண்களில் தண்ணீர் தெளித்து, முதுகில் ரெண்டு போடு போட்டு என்னை எழுந்து உட்காரச் செய்யும் சில திரைப்படங்களும் Mubiயில் உள்ளன.

ஊரடங்கு காலத்தில் அனைவருக்கும் வேலை பளு வெகுவாக அதிகரித்திருந்ததை உணர முடிந்தது. எவரை கேட்டாலும் 10, 11 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறினார்கள். இதற்கிடையில் ஒரு இலக்கிய ஆக்கத்தை வாசிக்கவோ, கலை நோக்குடைய திரைப்படத்தை பார்க்கவோ இயலாமல் இருந்தது. காரணம், 10 மணி நேர மூளை உழைப்பில் ஒவ்வொரு நாளின் இறுதியில் எஞ்சுவது சலிப்பு, சோர்வு, எப்போது சாப்பிட்டு உறங்கச் செல்லுவோம் என்ற ஏக்கம். அதுவும் ஒரு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து உண்டு, உடுத்தி, கழித்து, குழந்தைகளிடமோ, துணைவியாரிடமோ/கணவரிடமோ கொஞ்சி..... இதற்கெல்லாம் மத்தியில் வேலை என்பது பெரும் பூதம் போல் நம் அனைவரின் இல்லங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. வீட்டிலேயே இருப்பதால், வேலை நேரம் முடிந்தும் அவை அணைந்துவிடுவதில்லை. சதா மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்கக் கூடியது. "நாளைக்கு ஒரு டெலிவெரிபிள் இருக்கே...", "பாஸ் இன்னிக்கு சிரிச்சாரே, அப்போ அவருக்கு நம்மள புடிச்சிருக்குனு தான அர்த்தம்?..", "இந்த கிளைன்ட் சரியான சாவுகிறாகி. சாவடிக்குறான்.." இப்படி ஏதேனும் வசனங்கள் நம் மூளையில் பல கோணங்களில் சுழன்று வந்து கொண்டே இருக்கிறது. இது போன்ற வசனங்கள் நம் மூளையிலிருந்து அறுபட நான் அவ்வப்போது பல youtube வீடியோக்களையோ அல்லது மிகவும் பொறுமையாக நகரும் சில திரைப்படங்களையோ பார்ப்பதுண்டு. தூக்க மாத்திரைகள் உடலுக்கு நல்லதல்ல. ஆதலால், தூக்கத்தை வரவழைக்கும் சில திரைப்படங்கள், நேர்காணல்கள், பாடல்கள் என்று மக்கள் வெவ்வேறு வகைகளை நாடுவது நலமே.

எனக்கான தூக்க மாத்திரையை Mubi என்ற திரைப்பட தளத்திலிருந்து பெற்றுக்கொள்வேன். பல நாட்கள், வெகு விரைவில் கண்களை சொக்க வைக்கும் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் Mubiயில் காணக் கிடைத்தது. வெளி நாட்டு திரைப்படங்களுக்கு தனியாகவும், இந்திய திரைப்படங்களுக்கு தனியாகவும் தளம் இயங்குகிறது. இந்தியாவில் இவ்வளவு கலை நோக்குடைய சோதனை முயற்சிகள் வந்திருப்பதே Mubiயை பார்த்தே தெரிந்து கொண்டேன். தூக்கம் வெகு விரைவில் வர வேண்டும் என்றால், வெளி நாட்டு முதிரா முயற்சிகளை நாடுவது சிறப்பு. என் கணிப்பில் பாதிக்கு மேல் முதிரா முயற்சிகள் அல்லது போலி கலை ஆக்கங்கள். ஆனால் அரிதாக, தூங்க கெஞ்சிக்கொண்டிருக்கும் எனது கண்களில் தண்ணீர் தெளித்து, முதுகில் ரெண்டு போடு போட்டு என்னை எழுந்து உட்காரச் செய்யும் சில திரைப்படங்களும் Mubiயில் உள்ளன.

அப்படியாக, என் கண்ணிற்கு அகப்பட்ட ஒரு நல்ல திரைப்படம் I.D (https://mubi.com/films/i-d/watch). 1 மணி நேரம் 24 நான்கு நிமிடங்கள். அரை மணி நேரம் கடந்த உடன், காட்சிகள் கண்களில் அசைந்துக்கொண்டிருக்கும் போதே மோன நிலையை அடைந்து விட எண்ணியே I.D யை பார்க்கத் துவங்கினேன். ஆரம்ப காட்சியிலேயே மைய கதாபாத்திரத்தின் தொலை பேசி உரையாடல் என் கவனத்தைக் கோரியது. புதிதாக வேலை தேடி வந்திருக்கும் so called நகர்புற மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த பெண்ணின் தொலை பேசி உரையாடல் அவளை பற்றிய ஒரு சிறு குறிப்பை கொடுக்கிறது. சாலைகளில் சீரற்ற பல துணுக்குக் காட்சிகள் முன் நிற்க, அவளது உரையாடல் தொடர்கிறது. சில படங்களை முதல் காட்சியிலேயே அறிந்து விடலாம், "இப்படம் நம்முடன் உரையாட வந்திருக்கிறது" என்று. அவற்றுடன் உரையாட முயல்வதே நாம் அப்படைப்பிற்கு செய்யும் மரியாதை. அடுத்தடுத்தக் காட்சிகள் வர, அசதியாக இருந்த நான் முழு கவனத்துடன் நுகர ஆரம்பித்தேன். இரண்டாம் மூன்றாம் காட்சிகளில் படம் என்னை முழுதாக ஈர்த்துக்கொண்டது.

கதை சுருக்கம் இது தான். சிக்கிமிலிருந்து மும்பைக்கு வேலை நிமித்தம் குடிபெயரும் சாரு என்ற பெண் இன்னும் இரண்டு பெண்களுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாள். அவ்வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வரும் ஒருவர், வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று மயங்கி கீழே விழுகிறார். அதன் பிறகு சாரு என்ற நகர்புற - சமூக அடுக்குகளின் உயர் மட்டத்தில் இருக்கும் பெண் என்ன செய்கிறாள் என்பதைக் கொண்டு திரைக்கதை நகர்கிறது. படித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் Mubiயில் படத்தை பார்த்து விட்டு இக்கட்டுரையை தொடர்ந்தால் நல்லது. இங்கே ஒரு சிறு குறிப்பு அவசியம் என்று கருதுகிறேன். "நகர்புற - உயர் அல்லது மேல் தட்டு வர்க்கம் - எலீட் அல்லது அப்பர் மிட்டில் கிளாஸ்" என்று நான் வகைப்படுத்த விரும்புவது, வெறும் கணினி துறையில் வேலை பார்க்கும் மக்களை மட்டும் அல்ல. உண்மையிலேயே சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் கணினி துறை வேலையில் இருக்கும் பெரும்பாலானோர் மத்திய வர்க்கத்து பழக்க வழக்கங்களையும் மனநிலையையும் கொண்டவர்கள். நான் கூறும் நகர்புற மக்கள் எனப்படுபவர்கள் சிறு வயதிலிருந்தே மாபெரும் நகரங்களில், சில ஆயிரங்களையோ லட்சங்களையோ கொட்டிப் படிக்க வைக்கப்பட்டு பயின்று வெளி வந்தவர்கள். சேரிகளில் வாழும், அன்றாட வாழ்க்கையை பொருளின்மையோடு கழிக்கும் விளிம்பு நிலை மக்கள் மீது எப்போதும் ஒரு அசட்டுக் கோட்பாட்டு ரீதியிலான கரிசனத்தை மட்டுமே வைத்திருக்கும், தாய் மொழியை விட ஆங்கிலம் நாக்கில் வழியும் நகர்புற மக்கள். இவ்வாறான பாகுபாட்டைத் தெளிவாகச் சொல்லாமல் இக்கட்டுரையை என்னால் முழுமையாக எழுத முடியாது.

கதை அல்லது சம்பவம் நடப்பது மும்பையில். திரைப்படத்தின் முதல் 15 - 20 நிமிடம் ஒரு திரில்லர் படத்திற்குரிய உணர்வை தருகிறது. குறிப்பாக பெயிண்டருக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சி, சாரு ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு ஹாலிற்கு வரும் காட்சி, lift லிருந்து இறங்கும் காட்சி. என் பழகிப் போன சாதாரண மனித மனம் படத்தில் ஒரு வல்லுறவு காட்சியை எதிர் பார்த்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் படம் நகர்ந்து எங்கோ சென்று கொண்டிருந்தது எனக்கு பெரும் உவப்பை அளித்தது. சாரு பெயிண்டர் கீழே விழுந்த உடன் செய்யும் அனைத்தையும், நகத்தை கடிக்க முனைந்துகொண்டே, கண் புருவங்களை மிகவும் சுருக்கிக்கொண்டு பார்த்தது படத்தின் செறிவான தொழில்நேர்த்திக்கு கிடைத்தச் சான்று. சாரு தன் வீட்டிற்கு கீழே குடியிருக்கும் வயதான ஒருவரை வலுக்கட்டாயமாக அழைத்து வருவதில் தொடர்கிறது சாருவின் தவிப்புப் படலம். அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை கூட்டி வரும் போது அங்கே நடக்கும் சில இதர விஷயங்கள் (lift நின்று போவது, மொட்டைமாடிக்கு சென்று அதை முதலில் சரி செய்தல்) என் மன அமைதியை கலைத்தது.

சாரு மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுகிறாள். வீட்டிலிருந்து அவள் மருத்துவமனைக்குச் செல்லும் புறப்பாடின் போது அவ்வளவு நுட்பங்களை படம் தாங்கி நிற்கிறது. உடனே வந்து மேல் சட்டை ஒன்றை அணிந்து கொள்வது, சிகரெட் பாக்கெட்டை எடுக்கத் தயங்கி ஒரு நொடி யோசித்துப் பின் எடுத்துக் கொள்வது, படத்தின் முதல் 5 நிமிடத்தில் வரும் தனிக்காட்சிகளின் கோர்வைகளில் சமூக வகுப்படுக்குகள் ஒரே சாலையில் ஒன்றிணையும் விவரணைகள் (மாடுகள் சாலையை கடப்பது, கார் வைத்திருக்கும் பெண்மணியை சாலையில் திரியும் சிறுவர்கள் சிலர் ஏளனம் செய்வது, பெயிண்டர் வெகு தூரத்தில் சாலையில் வந்துகொண்டிருப்பது) என நுணுக்கம் மிகுந்த காட்சிகள் ஏராளம். படத்தின் authenticity உயர்வது இது போன்ற எண்ணற்ற நுணுக்கங்களால் மட்டுமே. சாரு முதல் காட்சியிலிருந்து ஆங்கிலம், சிக்கிம், ஹிந்தி என்று மாறி மாறி பேசி அசத்துகிறார். யதார்த்தவாத படங்களில் நடிகர்களின் திறன் என்பது மிக முக்கியமான ஒன்று. அது இல்லையேல் படம் இளித்துக்கொண்டு தோற்றுப்போகும். அவ்வகையில் சாரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் கீதாஞ்சலி தப்பா A 1 நடிகர்.

இதற்கு மேல் படத்தை அணு அணுவாக விரித்து, காட்சி வாரியாக விவரித்து அதற்கான விளக்கத்தை எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கு தேவைப்படும் பக்க அளவும் உழைப்பும் மிகுதி என்பதால் இக்கட்டுரையில் சாத்தியமில்லை. ஏன் அவ்வாறு விவரித்து எழுதப்பட வேண்டுமெனில், இப்படத்தின் விமரிசன கூட்டம் போன்ற கலந்துரையாடல் ஒன்று Youtube இல் காணக்கிடைக்கிறது(https://www.youtube.com/watch?v=_gZnvYuRJko&t=4s). NID அகமதாபாத் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பெடுக்கும் பகுதியாக அக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது என்று யூகிக்கிறேன். அதில் பங்குபெற்று, அக்கல்லூரியில் தலைமை வகிக்கும் HOD ஒருவர் எந்த வித உளத்தடையுமின்றி "People in the slum are half criminal" என்கிறார். படத்தின் இயக்குனர் கமல் அதை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டாலும், அந்த கலந்துரையாடலிலேயே தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவத்தை வைத்துத் தான் காட்சிகளை அமைத்திருப்பதாக கூறுகிறார். நகரின் ஒதுக்குப்புற பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்விடங்களுக்கு சென்ற போது அவர்கள் மிகுந்த வரவேற்புடன் தான் தன்னை அணுகியதாகக் கூறுகிறார். படத்திலும் இதை காட்சிகளில் வெளிப்படும் முரண் மூலம் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. சாரு பெயிண்டர் மயங்கி விழுந்த உடன் அக்கம் பக்கம் ஆட்கள் தேடி அலைகிறாள். எவருமே இல்லை. கடைசியாக கீழ் வீட்டிலிருக்கும் ஒரு பாட்டியை வலுக்கட்டாயமாக மேலே தன் வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இருவரும் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் திகைத்து நிற்கும் பொழுதில், பாட்டி securityயை அழைத்து வரச் சொல்கிறாள். இக்கட்டான சூழ்நிலையில் எந்நேரமும் உதவி புரிய சமூக வகுப்படுக்கில் கீழ் நிலையில் இருக்கும் எவரோ ஒருவரின் உதவி தேவை ஆகிறது. சாரு ரஃபீக் நகரில் பலரின் உதவியுடன் கிட்டத்தட்ட அங்கிருக்கும் அனைத்து சந்து பொந்துகளிலும் சென்று வருகிறாள். ரபீக் நகரில் இருக்கும் மக்கள் எந்த வித கூச்சமுமும் அச்சமமுமின்றி சாருவிற்கு உதவி புரிகிறார்கள்.

சாரு ரஃபீக் நகரில் மிகுந்த சுதந்திரமாக உலவுகிறாள் என்பது அடுத்தக் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. படத்தின் அடி நாதமே அறப் பொறுப்பைப் பற்றி அமைதியாக பேசுவது தான். உயரடுக்கில் இருக்கும் ஒரு பெண் எந்தளவுக்கு ஆழ்மனதின் தூண்டுதலால் உந்தப்படுகிறாள் என்பது தான் கதையின் கருவே. ஆதலால், அவ்வாறு தூண்டப்பட்ட ஒருவர், தன் மீது தவறு ஏதும் இல்லை என்று நிரூபிக்க முயலும் ஒருவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மிகையற்ற வாதமே. மேலும், இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது, படத்தில் அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் insensitive ஆன மக்கள் என்றும், சேரியில் வாழும் மக்கள் மிகுந்த நற்பண்புடையவர்கள் என்றும் ஒற்றைப்படை நோக்கில் படத்தில் காட்சிகள் உள்ளது என்பது. இந்த வாதம் NID போன்ற மதிக்கத்தக்க கல்வி நிறுவனத்திலின் உயர் பதவியில் இருக்கும் ஒருவரிடமிருந்து வருவதென்பது வியப்பாக உள்ளது. அதுவும், இவர் திரைத்துறையில் பாடம் எடுப்பவர். என் நினைவிலிருந்து உடனே எழும் சில காட்சிகளை மட்டும் எடுத்து வைத்து, சமூக வகுப்படுக்குகளில் கீழே இருக்கும் மக்களிடமும் உள்ள தீங்கான செயல்களை படம் சொல்லாமல் இல்லை என்பதை விளக்கலாம்.

உதாரணமாக, சாரு, வீட்டின் பால்கனியிலிருந்து பேசிக்கொண்டிருக்கும் போது, சாலையில் அலைந்து திரியும் சிறுவர்கள் சிலர், காரில் ஏறிச்செல்லும் பெண் ஒருவரை தகாத முறையில் அவமதித்து தங்களுக்குள் சைகை காண்பித்து பேசிக்கொள்கிறார்கள். ரஃபீக் நகரில் அலைந்து கொண்டிருக்கும் போது, சாருவை பின் தொடர்வது போன்று ஒருவர் ஒரு காட்சியில் வருகிறார். மிகத் தெளிவாக பின்தொடர்பவரின் மீது ஓர் ஐயத்தை ஏற்படுத்துகிறது. சாரு சந்தேகம் ஏற்பட்டு திரும்பி பார்த்து முறைக்கும் போது தான் பார்வையாளர்களுக்கு பதட்டம் கலைகிறது. கடைசியில் சாருவின் அலைபேசியை ரஃபீக் நகரில் வசிக்கும் ஒரு சிறுவன் திருடிக்கொண்டு ஓடுவது என படம் முழுவதும் எந்த சமூக வகுப்புக்கும் ஆதரவாக இல்லாமல் சாய்பற்ற காட்சிகள் விரவியேக்கிடக்கின்றன. நாம் எதை விரும்புகிறோமோ அதை மட்டுமே காண்கிறோம். NIDயில் இருக்கும் அந்த உயர் கல்வி அதிகாரிக்கு மட்டுமல்ல, படம் பார்த்த நம்மில் பலருக்கும் நான் மேலே விவரித்துள்ள காட்சிகள் மூளையில் பதிவாகியிருக்காது என்பது தெள்ளத்தெளிவானது.

இப்படத்தின் தரம் உலகத்தரமானது என்று வெகு எளிதாக கூறிவிடலாம். ஏனெனில், உலகின் எந்த மூலையில் வசிக்கும் ஒருவர் இப்படத்தை காண நேர்ந்தாலும் மிக எளிதாக சாருவின் மன ஓட்டத்தை அறிந்து விடலாம். சாருவிற்கு ஏற்படும் பதட்டம், குழப்பம், தவிப்பு, கவலை, அவஸ்தைகள், கோபங்கள் என அனைத்து உணர்வு நிலையும் பார்வையாளருக்கு படம் எளிதாக கடத்தி விடுகிறது. உதாரணம், சாரு, ரஃபீக் நகரில் உலவும் போது தனது அலைபேசி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கை மாறும் போது, பார்க்கும் நமக்கு பதற்றம் வராமல் இருக்காது. அந்த உணர்வு கடத்தலே முக்கியம் என்று கருதுகிறேன். எல்லாவற்றையுமே சாருவின் முக பாவனைகளில் காண்பிக்க இயலாது என்பது தேர்ந்த சினிமா ரசிகர்கள் புரிந்து கொள்வர். மேலும், இப்படம் யதார்த்தவாத சினிமா வகையை சேர்ந்தவை. ஆதலால் அதற்கேற்ற திரை மொழி மட்டுமே கதாப்பாத்திரங்கள் மூலம் அமைய முடியும்.

படத்தின் பல காட்சிகள் மிக நேரத்த்தியாக வந்திருக்கிறது. உதாரணமாக, "பார்ட்டி" முடிந்தவுடன் காதலர்களுக்குள் நடக்கும் சலசலப்புக் காட்சி. அபூர்வா என்ற சாருவின் வீட்டில் குடியிருக்கும் தோழி, அவருடைய காதலனை சந்தேகித்து சண்டை போட்டு கைகலப்புக்கு சில நொடிகளில் முன்னேறி, அபூர்வா தன்னுடைய காதலனை வீட்டை துரத்தும் போது கதவை திறக்க சிரமம் கொள்ளும் இடம் வரை ஒரு திடீர் படபடப்பை உண்டாக்குகிறது. இக்காட்சிக்கும் படத்தின் மைய கருவிற்கும் நிச்சயம் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால், மிக முக்கியமான காட்சி. ஒரு சமூக வகுப்பினரின் வாழ்வியலை பதிவு செய்ய விரும்புகையில் இது போன்ற நுணுக்கங்கள் மிகுந்த காட்சிகள் அவசியம் என கருதுகிறேன். அந்த சலசலப்பு முடிந்ததும், அவரவர் அவர்கள் வேலையை காண செல்கிறார்கள்.

"பார்ட்டி" நடந்து கொண்டிருக்கும் போது கோர்வை அதிகமற்ற, மதுவினால் உண்டாகும் தெளிவற்ற குரல் மற்றும் காட்சிப் பதிவுகளை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். சாருவிற்கு தன்னை சுற்றி நடக்கும் அனைத்தும் அர்த்தமற்றவையாகவே படுகிறது. மொண்ணைப் பேச்சுகள், ஊர் வம்புகள், புதிய இணையை தேடி அலைதல், எதிர்பாலினத்திரிடம் எல்லை மீறுதல் என சாருவின் நண்பர்கள் மது விருந்தில் செய்யும் அனைத்து அசட்டுத்தனங்களும் பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு எளிதாக புரியக்கூடிய ஒன்று. சாரு இவற்றுக்கெல்லாம் மத்தியில் இருந்தாலும் அவள் மனம் முழுவதும் "பெயிண்டர் யார்?" "அவரை பற்றிய விபரங்களை எப்படிக் கண்டுபிடிப்பது?" என்ற மன தொந்தரவிற்குள் மட்டுமே தன்னை புகுத்திக்கொள்கிறாள். சாரு, "பார்ட்டி"யின் போதும் சரி, வீட்டிலேயே அன்று முழுவதும் எதிர் பாரா விதமாக கழித்து விடும் பாட்டியுடன் உரையாடும் போதும் சரி, பேரறியா அறிமுகமில்லா பெயிண்டரை பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி விடுகிறாள்.

ஸ்மிதா மற்றும் அபூர்வா போன்ற கதாப்பாத்திரங்கள் அனைத்து காட்சிகளிலும் உயர் வகுப்பு மக்களின் சரியான பிரதிபலிப்பாகவே வந்து செல்கிறார்கள். வீட்டிற்கு வரும் வேலையாட்களின் மீதுள்ள அலட்சியம், அவர்கள் முன்னிலையிலேயே "these people are like this" என்று உரக்கச் சொல்லுதல், பெயிண்டர் இறந்து விட்டார் என்று தெரிந்தும் சாருவிற்கு உதவியாக மருத்துவமனைக்கு வர மறுத்தல் என்று தங்களுடைய வாழ்வே மையம் என்று நம்பிக்கொண்டிருக்கும் சுயநலம்மிக்க கதாபாத்திரங்கள் ஸ்மிதா மற்றும் அபூர்வா கதாப்பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தி, சாருவை ஒரு படி மேலேற்றி விடுகிறது.

படத்தின் உச்சக் காட்சியாக நான் கருதுவது, சாரு, இறந்து போன பெயிண்டரை சவக்கிடங்கு அறையில் புகைப்படம் எடுப்பது. ஒரு மனிதன் இறந்த பின் அவன் யார், எங்கிருந்து வந்திருக்கிறான், அவன் பெயர் என்ன, குடும்பம் இருக்கிறதா இல்லையா போன்ற தேடல் தான் இப்படத்தின் ஆன்மா. இது போன்று எவ்வளவோ மனிதர்கள் பிறர் கண் படாமல் வாழ்ந்து மடிகின்றனர். தனக்கென்ற எந்தவொரு அடையாளத்தையும் வாழும் போது ஏற்படுத்திக்கொள்ள இவர்களால் முடிவதில்லை. பிறப்பிலிருந்து ஒட்டிக்கொண்ட சாபமாக கூட இருக்கலாம். இப்படத்தில் வரும் பெயிண்டருக்கு எவ்வித குடும்பமோ, நண்பர்களோ இல்லை என வைத்துக்கொள்வோம். சாரு தான் அந்த மனிதனின் நினைவுகளோடு இருக்கப்போகும் ஒரே உயிர். ஒரு மனிதன் "வாழ்ந்தான்" என்பதற்கு எந்த அடையாளமும் இன்றி இறந்து போகிறான். படம் முடிந்தவுடன், மனித உயிர் மாபெரும் நகரங்களில் எவ்வளவு மதிப்பற்றது என்ற துணுக்குறல் நமக்கு வராமல் இருக்காது. முக்கியமாக விளிம்பு நிலையில் வாழ்வை பெரும் போராட்டங்களுக்கு இடையில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது முற்றிலும் தகும். சாலையில் நாம் எவ்வளவோ மனிதர்களை மன நிலை பிறழ்ந்த நிலையிலும், பிறரிடம் யாசித்து வாழ்பவர்களாகவும் காண்கிறோம். திடீரென்று ஒரு நாள் அவர்கள் நம் கண்களிலிருந்து, இப்பெரும் சலனம்மிக்க மாநகரிலிருந்து மறைந்து போகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள், இருக்கிறார்களா, மறித்து விட்டார்களா என்று இரண்டு நிமிடம் ஸ்தம்பித்து நிற்போம். அவ்வளவே மனித வாழ்வு.

I.D. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம். மேல் தட்டு வர்க்கத்து மக்களின் பாசாங்கான அசட்டுத்தனமான சுயமுனைப்புக் கொண்ட வாழ்க்கையை மிக இயல்பான காட்சிகள் மூலம் விவரிக்கும் அதே வேளையில், அவ்வடுக்கு மக்களிடமிருந்தே ஆழ்மன தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு நகரை சுற்றி அலையும் ஒருவரை பற்றிய கதையை கூறியதில் மிக முக்கியமான படம். Dhobi Ghat இது போன்ற சமூக அடுக்குகளை பற்றிப் பேசிய இன்னொரு உன்னத ஆக்கம். சமூக சமனின்மை நிலையை மேலும் மேலும் விரிவாக பதிவு செய்ய இயக்குனர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் என்று நம்புவோம்.

***

பிரசன்னா பெங்களூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஆவார். அவர் முக்கியமாக சிறு கதைகள் மற்றும் புத்தக மதிப்புரைகளில் கவனம் செலுத்துகிறார். பல்வேறு தமிழ் இலக்கிய பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Support our literary endeavours by subscribing to the FREE Newsletter service of Bengaluru Review here . Reach out to us with any queries or ideas of your own at reviewbengaluru@gmail.com.

Like
Comment
Loading comments